சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

எம்.ஜி.ஆர்., போல கமலால் சாதிக்க முடியாது!

Added : நவ 22, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
என்.மல்லிகைமன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சினிமாவில் பல தடைகளை வென்று, சாதனை செய்தது போல, அரசியலிலும் சாதனை நிகழ்த்துவேன்' என்று தம்பட்டம் அடித்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன். கடந்த, ௨௦௨௧ சட்டசபை தேர்தலில், இவரது சினிமா புகழ் எடுபடாததால், கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனிடம்

என்.மல்லிகைமன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சினிமாவில் பல தடைகளை வென்று, சாதனை செய்தது போல, அரசியலிலும் சாதனை நிகழ்த்துவேன்' என்று தம்பட்டம் அடித்திருக்கிறார், மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவரான நடிகர் கமல்ஹாசன்.

கடந்த, ௨௦௨௧ சட்டசபை தேர்தலில், இவரது சினிமா புகழ் எடுபடாததால், கோவை தெற்கு தொகுதியில், பா.ஜ., வேட்பாளர் வானதி சீனிவாசனிடம் தோற்றார், இந்த வீராதி வீரர். நகராட்சி தேர்தலிலும், இவரது கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தே.மு.தி.க., என்ற பெயரில், கட்சி ஆரம்பித்து தனித்துப் போட்டியிட்டு, எம்.எல்.ஏ.,வானார் நடிகர் விஜயகாந்த். அதன்பின், அ.தி.மு.க., உடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டு, மாபெரும் வெற்றி பெற்று எதிர்க்கட்சி தலைவரானார். காமெடி நடிகர் கருணாசும், அ.தி.மு.க., உடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்று, எம்.எல்.ஏ.,வானார். இவர்களின் இடத்தை கூட கமல் இதுவரை பிடிக்கவில்லை.

அதே நேரத்தில், எம்.ஜி.ஆர்., விஷயத்தில் அப்படி இல்லை... சினிமாவிலும், அரசியலிலும் மகத்தான சாதனைகள் நிகழ்த்தியவர் அவர் மட்டுமே. கால் ஒடிந்த நிலையிலும், தாடையில் குண்டடிபட்டு, சரியாக தெளிவாக பேச முடியாத நிலையிலும், நம்பிக்கை தளராமல் தொடர்ந்து சினிமாவில் நடித்து வெற்றி பெற்றார் அவர்.

அண்ணாதுரை துவங்கிய தி.மு.க., பட்டிதொட்டி எல்லாம் வளரக் காரணமாக இருந்தவர். அந்தக் கட்சி ஆட்சியை பிடிக்க அடித்தளம் அமைத்தவரும் அவரே. தி.மு.க.,விலிருந்து வெளியேற்றப்பட்ட பின், தமிழகத்திலும், புதுச்சேரியிலும், ஒரே சமயத்தில் அ.தி.மு.க., ஆட்சி அமையச் செய்து, பெரும் புரட்சி செய்தவர் அவர்.

எம்.ஜி.ஆர்., மறைந்து, 35 ஆண்டுகள் கடந்து விட்டாலும், இன்னும் அவரை தமிழக மக்கள் மறக்கவில்லை. எனவே, 'சினிமாவில் சாதனைகள் செய்தது போல, அரசியலிலும் சாதனைகள் செய்து காட்டுவேன்' என்று, நடிகர் கமல் 'டயலாக்' பேசுவது நிச்சயம் எடுபடாது. தி.மு.க., உடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டால், இவர் எம்.எல்.ஏ., ஆகலாம். ஆனால், இவரால் ஆட்சியைப் பிடித்து, முதல்வராக முடியாது என்று, உறுதியாகச் சொல்லலாம்.

நடிகர்கள் நாடாளும் கதை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிவடைந்து விட்டது. 'நினைத்ததை நடத்தியே முடிப்பவன் நான்' என்று சொல்லும், தகுதியும், தராதரமும், எம்.ஜி.ஆருக்கு மட்டுமே உண்டு!


திட்டங்கள் ஏட்டுச் சுரைக்காயாகும்!கி.லட்சுமி நாராயணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'சாமி வரம் கொடுத்தாலும், பூசாரி வரம் கொடுக்க வேண்டுமே!' என்ற பழமொழி, அரசு ஊழியர் களுக்கு கச்சிதமாக பொருந்தும். அரசு சட்டம் போடலாம், அரசாணை பிறப்பிக்கலாம், நீதிமன்றங்கள் தட்டிக் கேட்கலாம். அதை, சில அதிகாரிகள் பின்பற்று கின்றனர்; பலர் கண்டு கொள்வதே இல்லை.

என் நண்பர், சென்னை மயிலாப்பூர் மற்றும் தி.நகர், சார் -- பதிவாளர் அலுவலகங்களில், இரண்டு சொத்துக்களை பத்திரப்பதிவு செய்தார். அத்துடன், அந்தச் சொத்துக் களுக்கான பட்டா மாற்றவும் விண்ணப்பித்தார். மயிலாப்பூர் பத்திரப் பதிவு அலுவலகத்தில் பதிவான சொத்துக்கான பட்டா பெயர் மாற்றம் உடனடியாக நிகழ்ந்து விட்டது.

ஆனால், தி.நகர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த சொத்துக்கான பட்டா பெயர் மாற்றம் நிகழவில்லை. இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட சார் - பதிவாளரை அணுகிய போது, தாலுகா அலுவலகத்தை அணுகும்படி கூறி விட்டார்; அதனால், தாலுகா அலுவலகத்திற்கு நடந்து கொண்டிருக்கிறார் நண்பர்.

விபரம் அறிந்தவர்களை கேட்ட போது, தி.நகர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவாகும் சொத்துக்களுக்கான பட்டா பெயர் மாற்றம் நடப்பதில்லை என்றே பதில் வந்தது. ஒரே துறையின் கீழ் செயல்படும் இரண்டு அலுவலகங்களின் செயல்பாடுகள், எப்படி முரண்பாடாக உள்ளன பாருங்கள்!

மாநிலத்தை ஆளும் கழக அரசானது, புதிது புதிதாக திட்டத்தை அறிவிக்க தவறுவதில்லை. ஆனால், மக்களை கவரும் வகையில் அறிவிக்கப்படும் இந்தத் திட்டங்கள், அதன்பின், சரியான முறையில் அமல்படுத்தப்படுகின்றனவா என்பதை கண்காணிப்பதில்லை.

அப்படி கண்காணித்து, தவறு செய்யும் அதிகாரிகள் மீது, 'சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டால், தவறுகள் நிகழாது; திட்டமும் சரியாக மக்களுக்கு பலன் தரும் வகையில் அமையும். சரியாக பணி செய்யாதவர்களுக்கு தண்டனை என்ற ஒன்று இருந்தால் தான், அவர்கள் ஒழுக்கமாக தங்கள் வேலையை செய்வர்.

இல்லையெனில், திட்டங்கள் மக்களை சென்றடையாமல் ஏட்டுச் சுரைக்காயாகவே பெயர் அளவில் நீடிக்கும்; மக்களின் அவதிகளும் தொடர்ந்தபடியே இருக்கும். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு, அரசு கடும் நடவடிக்கை எடுக்குமா?




வருமான வரம்பை மாற்றி அமையுங்க!ஏ.ஸ்ரீவாஸ், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கு, கல்வி மற்றும் வேலைவாய்ப்பில், ௧௦ சதவீத இட ஒதுக்கீடு வழங்கியது செல்லும்' என, உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துஉள்ளது.

தங்களுக்கு எதிராக நீதிமன்றம் எந்த தீர்ப்பை வழங்கினாலும், அதை விமர்சிக்கும் தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், இந்த இடஒதுக்கீட்டு தீர்ப்பையும் விவாதப் பொருளாக்கி உள்ளன.

பொதுவாக, இட ஒதுக்கீடானது குறிப்பிட்ட காலத்திற்குத் தான் தொடர வேண்டும் என, அரசியல் சட்டத்தை உருவாக்கிய மேதைகள் கூறியுள்ளனர்.

ஆனால், தாழ்த்தப்பட்டோர் உள்ளிட்டோருக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீடானது, ௭௦ ஆண்டுகளை தாண்டியும் தொடர்கிறது; இன்னும் நிறுத்தப்படவில்லை.

அதேநேரத்தில், தற்போது அமலில் உள்ள ஜாதி ரீதியான இடஒதுக்கீட்டில், கீழ்நிலையில் உள்ளவர்கள் பயன் அடைந்ததாக தெரியவில்லை; ஏற்கனவே சலுகைகளை அனுபவித்தவர்களே, மீண்டும் மீண்டும் பலன் அடைந்து வருகின்றனர்.

அப்படி அவர்கள் சலுகை அனுபவிப்பது தொடரக்கூடாது என்பதற்காகவே, 'கிரீமிலேயர்' என்ற, அதாவது, பிற்படுத்தப்பட்டவர்களில் வருமான ரீதியாக முன்னேறிய பிரிவினரை ஒதுக்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டது. அதாவது, குறிப்பிட்ட அளவுக்கு மேலாக வருமானம் உள்ளவர்கள், இட ஒதுக்கீடு சலுகை பெற முடியாது என்பதாகும்.

தற்போதைய, ௧௦ சதவீத இட ஒதுக்கீடு தீர்ப்பில், பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சலுகை பெறுவதற்கான வருமான வரம்பு, ௮ லட்சம் ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு உள்ளது; இது, அதிகமாகும்.

இரண்டரை லட்சம் ரூபாய் வரை வருமானம் உள்ளவர்கள், வரி செலுத்த வேண்டியதில்லை என, வருமான வரிச் சட்டம் சொல்கிறது. அதையே பொருளாதாரத்தில் நலிந்த பிரிவினருக்கான சலுகை பெறுவதற்கான வருமான வரம்பாக நிர்ணயிக்கலாம்.

அத்துடன், இந்த வருமான வரம்பை, வருமான வரி விதிகளுக்கு உட்பட்டு, ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அமைக்கலாம். அப்போது தான், உண்மையாகவே, பொருளாதார ரீதியாக நலிந்த நிலையில் உள்ளவர்கள் பலன் அடைய முடியும். இதுபற்றி மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-நவ-202223:34:44 IST Report Abuse
Anantharaman Srinivasan திநகர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்த சொத்துக்கான பட்டா பெயர் மாற்றம் செய்ய, சொத்து மதிப்பில் ஒரு percent ( 1% ) லஞ்சம் கேட்பதாக சென்றவாரம் கேள்விப்பட்டேன்...
Rate this:
Cancel
Anantharaman Srinivasan - chennai,இந்தியா
23-நவ-202223:29:38 IST Report Abuse
Anantharaman Srinivasan நடிகர்கள் நாடாளும் கதை, எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவோடு முடிவடைந்து விட்டது என்று சொல்லிவிடமுடியாது. இப்போதைக்கு இல்லை. வரும் காவத்தில் எதுவும் நடக்கலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X