பந்தலுார்:கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை சேதப்படுத்திய 'பந்தலுார் மக்னா-2' யானையை பிடிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம், கூடலுார் மற்றும் பந்தலுார் தாலுகாவில் உள்ள கிராமங்களில் பல வீடுகளை சேதப்படுத்திய மக்னா யானை, இரு நாட்களுக்கு முன்பு ஒரு பெண்ணை தாக்கி கொன்றது. அந்த யானையை பிடித்து முதுமலை கொண்டு செல்ல நேற்று முன்தினம் மாலை வனத்துறை உத்தரவு பிறப்பித்தது.
இதையடுத்து, ஜீன்பூல் தாவரவியல் மையத்தில் முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ் தலைமையில், கூடலுார் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், புலிகள் காப்பக கால்நடை மருத்துவர் ராஜேஷ் உள்ளிட்டோர் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் நேற்று நடந்தது.
நிறைவில், கள இயக்குனர் வெங்கடேஷ் கூறியதாவது:
கூடலுார் மற்றும் பந்தலுார் சுற்றுவட்டார பகுதியில், 60க்கும் மேற்பட்ட குடியிருப்புகளை மக்னா யானை சேதப்படுத்தி உள்ளது. இந்த யானைக்கு 'பந்தலுார் மக்னா-2' என பெயரிடப்பட்டு பிடிப்பதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இதில், 50-க்கும் மேற்பட்ட வனக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர்.
பாதுகாப்பான இடத்தில் யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடித்து, முதுமலை புலிகள் காப்பக அடர் வனத்தில் விடுவிக்கப்படும். தற்போது, வனக்குழுவினர் யானையின் செயல்பாடுகளை கண்காணித்து வருகின்றனர்.
முதுமலையிலிருந்து, வசீம் மற்றும் விஜய் ஆகிய கும்கி யானைகள் தேவாலா பகுதியில் தயார் நிலையில் உள்ளன. இதனால், பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை; யானை விரைவில் பிடிக்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார்.