ஆலந்துார் :சென்னை மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்திற்கு உட்பட்ட நந்தம்பாக்கம், 158வது வார்டு, 'பிளாஸ்டிக்' இல்லாத வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, மாநகராட்சியின் ஆலந்துார் மண்டலத்தில், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை குறித்து சுகாதாரத்துறை சார்பில் 20 நாட்களாக தொடர்ந்து 978 கடைகளில் சோதனை நடத்தப்பட்டது. இதில், தடை செய்யப்பட்ட, 100 கிலோ பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
விதிமுறை மீறி பிளாஸ்டிக் பைகளை பயன்படுத்திய கடை உரிமையாளர்களிடம் இருந்து, 50 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டது.
தொடர் ஆய்வுகளை அடுத்து, ௧௫௮வது வார்டு, 'பிளாஸ்டிக்' இல்லாத வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மண்டல சுகாதார அலுவலர் சுதா கூறியதாவது:
மண்டலம் முழுவதும் 20 நாட்களில் நடந்த சோதனைக்கு பிறகு மீண்டும், 96 கடைகளில் ஆய்வு மேற்கொண்டோம். இதில், 67 கடைகளில் பிளாஸ்டிக் பொருட்கள் முழுமையாக அகற்றிஉள்ளனர்.
அதேபோல, நந்தம்பாக்கத்தில் உள்ள, 158 வது வார்டில், 100 சதவீத கடைகளிலும் பிளாஸ்டிக்கிற்கு மாற்று பொருட்களை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.
இதனால், அந்த வார்டு, பிளாஸ்டிக் விற்பனையில்லா வார்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரசு உத்தரவு படி, இன்று முதல் 25ம் தேதி வரை, தெருவோரக் கடைகள், மொத்த விற்பனையகங்கள், தொழிற்சாலை பகுதிகளில் சோதனை மேற்கொள்ளப்படும். மேலும், பிளாஸ்டிக் தீங்கு குறித்து மக்களிடம் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.