வில்லிவாக்கம், பேருந்து நிறுத்தத்தில் மாடுகள் வளர்ப்போர் அட்டூழியம் செய்வதால், பயணியர் கடும் அவதியடைகின்றனர்.
பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறாக சாலைகளில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்து, அவற்றின் உரிமையாளர்களிடம், மாநகராட்சியினர் அபராதம் வசூலித்து வருகின்றனர்.
அதன்படி, மாடுகளைப் பிடிக்கும் மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் ஆய்வாளர்களை, மாட்டின் உரிமையாளர்கள் மிரட்டுவது வாடிக்கையாகி விட்டது.
வில்லிவாக்கம், எம்.டி.எச்., சாலையில், பாடி மேம்பாலம் அருகில், சிட்கோ நகர் பேருந்து நிறுத்தம் உள்ளது. இங்கு, தடம் எண் '48கே, 45 ஜி, 40ஏ' உள்ளிட்ட மாநகர பேருந்துகள் நின்று செல்கின்றன.
நுாற்றுக்கணக்கான பயணியர் பயன்படுத்தும் இந்த பேருந்து நிறுத்தத்தில், மாடு உரிமையாளர்கள் தங்களது மாடுகளை கட்டி அட்டூழியம் செய்கின்றனர்.
இதனால், பேருந்து நிறுத்தம் முழுதும் மாட்டுச் சாணமாக காட்சியளிக்கிறது. அதே சமயம், வில்லிவாக்கத்தில் சுற்றித் திரியும் மாடுகளைப் பிடித்தால், அவற்றின் உரிமையாளர்கள் அதிகாரிகளுடன் வாக்குவாதம் செய்கின்றனர்.
எனவே சம்பந்தப்பட்ட சுகாதார அதிகாரிகள் ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.