குடியிருப்பு நடுவே மழைநீர் குளம்
வெள்ளக்கிணறு, இரண்டாவது வார்டு, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில், கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக மழைநீர் தேங்கி நிற்கிறது. அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- மணிமாறன், வெள்ளக்கிணறு.
6 மாதமாக வீணாகும் குடிநீர்
இடையர்பாளையம், சரவணா நகர், ஆதித்யா அவென்யூ பகுதியில், ஆறு மாதங்களாக குழாய் உடைந்து, சாலையில் குடிநீர் வீணாகிறது.
- மாதவி, சரவணா நகர்.
சாக்கடை அடைப்பு
இருகூர், எஸ்.ஐ.எச்.எஸ். காலனி, சந்திரகலா டவுன்ஷிப் குடியிருப்பு பகுதியில், சாக்கடை கால்வாயில் அடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், கழிவுநீர் சாலையில் ஓடுகிறது.
- மகேஷ், இருகூர்.
படையெடுக்கும் பாம்புகள்
ராமநாதபுரம், கொங்கு நகரில் குடியிருப்புக்கு அருகில், அடர் புதரும், மரக்கழிவுகளும் நிறைந்து காணப்படுகிறது. இதனால், வீடுகளுக்குள் பாம்பு போன்ற உயிரினங்கள் வருகின்றன.
- ரங்கராஜ், ராமநாதபுரம்.
தரமற்ற முறையில் சாலைப்பணி
மாநகராட்சி, 16வது வார்டு, காமராஜ் நகர், முத்துமாரியம்மன் கோவில் அருகே மணல் மூட்டையை அடுக்கி மேலே, தார் சாலை போடப்பட்டது. சில நாட்களிலே, மணல் மூட்டை சரிந்து, சாலை இடிந்து விட்டது.
- கோபிநாத், டி.வி.எஸ்.நகர்.
குடிநீர் வீண்
சின்னமேட்டுப்பாளையம், அத்திப்பாளையம் சாலை, சுண்ணாம்பு கால்வாயிலிருந்து அரை கிலோ மீட்டர் தொலைவில், பிரதான குடிநீர் குழாய் உடைந்துள்ளது. கடந்த ஐந்து மாதமாக தண்ணீர் வீணாவது குறித்து, புகார் தெரிவித்தும் நடவடிக்கையில்லை.
- சக்திவேல், சின்னமேட்டுப்பாளையம்.
சேதமடைந்த சாலை
கே.கே.புதுார், ராமசாமி வீதியில், சாக்கடை கால்வாய் சரிவர துார்வாராமல், குப்பை அடைத்து, புதர் மண்டி கிடக்கிறது. சாலையும் ஆங்காங்கே குழிகளாக, மிகவும் மோசமாக சேதமடைந்துள்ளது.
- அசோக், கே.கே.புதுார்.
நிழற்கூரை வேண்டும்
பாலக்காடு மெயின் ரோடு, குவாரி ஆபீஸ் பேருந்து நிறுத்தத்தில் இருந்த நிழற்கூரை, சாலை விரிவாக்கத்திற்காக அகற்றப்பட்டது. கடந்த மூன்று ஆண்டுகளுக்கு மேலாக, நிழற்கூடை அமைத்து தரக் கோரியும், இதுவரை நடவடிக்கையில்லை.
- ஞானமூர்த்தி, செல்வபுரம்.
அரைகுறை பணி
டாடாபாத், எட்டாவது வீதியில், மின் ஒயர்களை உரசிய கிளைகளை வெட்டியபின்பு, சாலையிலேயே மின்வாரிய பணியாளர்கள் போட்டுச்சென்றுள்ளனர்.
- பரணி, டாடாபாத்.
தார் சாலையின்றி தவிப்பு
ஒண்டிப்புதுார், சுங்கம், அடப்பகாடு பகுதியில், மண் சாலையில் மழைக்காலத்தில் வாகனங்களை இயக்க முடியவில்லை. தார் சாலை அமைத்து தர வேண்டும்.
- அருண், ஒண்டிப்புதுார்.
சுகாதார சீர்கேட்டால் பரவும் காய்ச்சல்
புலியகுளம், 64வது வார்டு, மசால் லே-அவுட் பகுதியில் குடியிருப்பு பகுதியில் குப்பை தேங்கி கிடக்கிறது. துார்வாராததால் சாக்கடையிலும் அடைப்பு ஏற்பட்டுள்ளது. சுகாதார சீர்கேட்டால் குழந்தைகளுக்கு அடிக்கடி காய்ச்சல் ஏற்படுகிறது.
- தங்கவேல், புலியகுளம்.
தெருவிளக்கு பழுது
சரவணம்பட்டி, அண்ணா நகரில், 'எஸ்.பி -30, பி - 1' என்ற எண் கொண்ட கம்பத்தில், கடந்த 15 நாட்களாக தெருவிளக்கு பழுதாகியுள்ளது.
- நீலகண்டன், சரவணம்பட்டி.
ஆள் விழுங்கும் குழிகள்
ஆவாரம்பாளையம், 28வது வார்டு, மகாத்மா காந்தி ரோடு முழுவதும், அகலமான குழிகள் காணப்படுகின்றன. தினமும் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர்.
- பரமசிவம், ஆவாரம்பாளையம்.
சாலையில் திரியும் குதிரைகள்
வடவள்ளி பகுதிகளில், தொண்டாமுத்துார், மருதமலை மற்றும் இடையர்பாளையம் ரோடு பகுதியில் குதிரைகள் சுற்றித்திரிகின்றன. சாலையில் அங்கும், இங்கும் திரியும் குதிரைகளால் வாகனஓட்டிகள் விபத்துக்குள்ளாகின்றனர்.
- சண்முகம், பொம்மண்ணம்பாளையம்.