சென்னை: தமிழகத்தில் மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை, 33 சதவீதம் மின் வாரியமும், 67 சதவீதத்தை தனியார் நிறுவனங்களும் மேற்கொள்ள, மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
மத்திய அரசு, மின்சாரத்தை ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு எடுத்து செல்லும்போது ஏற்படும் மின் இழப்பை பூஜ்ஜியமாகக் குறைக்க, மறுசீரமைக்கப்பட்ட மின் வினியோக திட்டத்தை துவக்கியுள்ளது.
இத்திட்டத்தை, தமிழகத்தில் 10 ஆயிரத்து 790 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ள, மின் வாரியத்திற்கு, மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதில், மத்திய அரசு சார்பில், 8,600 கோடி ரூபாய் கடனாக வழங்கப்படும்.
ஐந்து ஆண்டுகளுக்குள் பணிகளை முடித்து விட்டால், மொத்த கடனில் 60 சதவீதம் மானியமாகி விடும்; மீதி 40 சதவீதம் மட்டும் செலுத்தினால் போதும். அவகாசத்திற்குள் பணிகளை முடிக்கவில்லை எனில், மொத்த கடன் தொகையையும் வட்டியுடன் சேர்த்து திரும்ப செலுத்த வேண்டும்.
'சுவிட்ச் யார்டு'
தமிழக மின் வாரியம், மறுசீரமைக்கப்பட்ட திட்டத்தின் கீழ் புதிய மின் வழித்தடங்கள் அமைப்பது, அதிக துாரம் உடைய வழித்தடங்களில் பழுது ஏற்படும்போது, மொத்தமாக மின் வினியோகம் நிறுத்துவதற்கு பதில், ஒவ்வொரு 2 கி.மீ., துாரமும், 'சுவிட்ச் யார்டு' கட்டமைப்பை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது.
மொத்த திட்ட பணிகளும் ஆண்டுதோறும் என, ஐந்து ஆண்டுகளுக்கு இலக்கு நிர்ணயித்து செயல்படுத்தப்பட உள்ளது.
![]()
|
இந்தாண்டில் 2,050 கோடி ரூபாய் செலவில், 26 ஆயிரத்து மின் வினியோக டிரான்ஸ்பார்மர்கள், 16 ஆயிரம் கி.மீ., மின் வழித்தடங்கள் அமைக்கப்பட உள்ளன.
இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:
மறுசீரமைக்கப்பட்ட மின் திட்டத்தின் ஒட்டுமொத்த பணிகளையும், ஒப்பந்த நிறுவனம் வாயிலாக மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
இதன் கீழ், ஒப்பந்தம் எடுக்கும் நிறுவனம் மின் சாதனங்களை வாங்கி, மின் வழித்தடங்கள் அமைப்பது உள்ளிட்ட திட்டப் பணிகளை செய்ய வேண்டும். அதற்கான செலவை, மின் வாரியம் வழங்கும்.இந்த முறையால், நிறுவனங்கள் தரமான உபகரணங்களை வாங்கி, பொருத்துமா என்பதை ஆய்வு செய்வது சிரமம். இது தொடர்பாக, மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டது.
33 சதவீதம்
தற்போது, திட்டப் பணிகளை 33 சதவீதம் மின் வாரியமும், 67 சதவீதத்தை ஒப்பந்த நிறுவனம் வாயிலாகவும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதனால், மின் வாரியம் 33 சதவீத பணியின் கீழ், திட்டத்திற்கு தேவைப்படும் டிரான்ஸ்பார்மர்கள், மின் கம்பங்களை வாங்கித் தரும். மற்ற உபகரணங்களை வாங்கி, ஒப்பந்த நிறுவனங்கள் திட்டப் பணிகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.