சென்னை : தமிழக பள்ளிக் கல்வி துறை வளாகத்தில், முன்னாள் தி.மு.க., அமைச்சர் அன்பழகன் பெயரில், அலங் கார வளைவு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன. இதனால், கல்வித் துறைக்கு கட்சி சாயம் பூசப்படுவதாக சர்ச்சை எழுந்துள்ளது.
சென்னையில் பள்ளிக் கல்வி துறை இயக்குனரகம் அமைந்துள்ள டி.பி.ஐ., வளாகம், ஆங்கிலேயர் காலத்தில் உருவாக்கப்பட்ட பாரம்பரியம் மிக்கது. இங்கு ஆங்கிலேயர் கால பாரம்பரிய கட்டடங்களும் உள்ளன.
இந்த வளாகத்தில், அ.தி.மு.க., ஆட்சி காலத்தில், புதிதாக அடுக்குமாடி கட்டடம் கட்டப்பட்டது. அதற்கு, முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர்., பெயர் சூட்டப்பட்டது.
இந்நிலையில், தி.மு.க., ஆட்சிக்கு வந்ததும், மறைந்த முன்னாள் அமைச்சர் அன்பழகனுக்கு சிலை வைக்கவும், அலங்கார வளைவு அமைக்கவும் முயற்சி மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
முதற்கட்டமாக, நுங்கம் பாக்கம் கல்லுாரி சாலையில், டி.பி.ஐ., வளாகத்தின் மத்திய பகுதி நுழைவு வாயிலில், அன்பழகன் பெயரில் அலங்கார வளைவு அமைக்கும் பணிகள் துவங்கியுள்ளன.
![]()
|
கட்சி சாயம்
அடுத்த மாதம் 19ம் தேதி, அன்பழகனின் நுாற்றாண்டு பிறந்த தினத்தை ஒட்டி, இந்த வளைவை திறப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, பொதுப்பணித் துறை துவங்கியுள்ளது.
முதற்கட்ட பணிகளை, பொதுப்பணித் துறை அமைச்சர் வேலு நேரில் பார்வையிட்டுள்ளார்.
இதையடுத்து, பள்ளிக் கல்வி இயக்குனரக கட்டடத்தின் முன் பகுதியில், தேசிய கொடிக் கம்பம் இருக்கும் பகுதியில், அன்பழகனுக்கு சிலை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், இந்த பணிகள் இன்னும் துவங்கப்படவில்லை.
இந்நிலையில், அரசுக்கு சொந்தமான பள்ளிக் கல்வி வளாகத்தை, ஆளுங்கட்சியான தி.மு.க., அரசியல் சார்ந்த இடமாக மாற்ற முயற்சிப்பதாக, ஆசிரியர்களும், கல்வியாளர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
அனைவருக்கும் பொதுவான, ஜாதி, மத, கட்சி, இன பேதமற்ற கல்வியை வழங்க கூடிய துறையின் தலைமை அலுவலகத்திற்கு கட்சி சாயம் பூசும் முயற்சி, தவறான முன்னுதாரணத்தை ஏற்படுத்தும் என, கல்வியாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
நிதி வளாகத்தில் சிலை
மறைந்த அன்பழகன் நுாற்றாண்டு துவக்க விழா, கடந்த ஆண்டு கொண்டாடப்பட்டது.
அதையொட்டி, கடந்த ஆண்டு டிச., 19ம் தேதி, சென்னை, நந்தனத்தில் உள்ள, ஒருங்கிணைந்த நிதித் துறை வளாகத்திற்கு, 'பேராசிரியர் அன்பழகன் மாளிகை' என, பெயர் சூட்டப்பட்டது.
அந்த வளாகத்தில், அவரது சிலையும் அமைக்கப்பட்டது. அந்த சிலையை, முதல்வர் ஸ்டாலின் திறந்து வைத்தார்.
மறைந்த காங்கிரஸ் தலைவரும், முன்னாள் முதல்வருமான காமராஜர் ஆட்சி காலத்தில்தான், தமிழகத்தில் கல்வித் துறை மிகப்பெரிய வளர்ச்சியை பெற்றுள்ளது. அதனால், 'கல்வி கண் திறந்த காமராஜர்' என்று, அவர் புகழப்பட்டார். அவரது பிறந்த நாளை, கல்வி வளர்ச்சி நாளாக, அரசு கொண்டாடி வருகிறது.பள்ளிக் கல்வி இயக்குனரக வளாகத்தில், காமராஜருக்கு எந்த முக்கியத்துவமும் தரப்படவில்லை. அவருக்கு சிலையோ, அவர் பெயரில் கட்டடமோ இல்லை. அதேபோல், ஆசிரியர் தினம் கொண்டாடப்படும் முன்னாள் ஜனாதிபதி சர்வபள்ளி ராதாகிருஷ்ணனுக்கும், அங்கு எந்த முக்கியத்துவமும் வழங்கப்படவில்லை.அதேநேரத்தில், தி.மு.க., முன்னாள் அமைச்சருக்கு, அவர் கல்வித் துறை அமைச்சராக இருந்தார் என்பதற்காக, சிறப்பு கவுரவம் அளிப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இந்த முயற்சி வெற்றி பெற்றால், வரும் காலங்களில் பள்ளிக் கல்வி அமைச்சராக இருந்த, தி.மு.க., - அ.தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் பெயரில், அந்த வளாகம் முழுக்க சிலைகளும், துாண்களும் தான் இருக்கும் என, பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் கவலை தெரிவிக்கின்றனர்.
'பள்ளிக் கல்வித் துறை வளாகத்தில், முன்னாள் தி.மு.க., அமைச்சர் அன்பழகனுக்கு, சிலை வைக்கும் திட்டத்தை, தமிழக அரசு கைவிட வேண்டும்' என, தமிழக பா.ஜ., துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:'கடந்த 2013 உச்ச நீதிமன்ற உத்தரவு அடிப்படையில், தமிழகத்தில் பொது இடங்களில், எந்த சிலை நிறுவவும், தமிழக அரசு அனுமதி அளிக்கவில்லை' என, ஜன., 23ல், சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமைச் செயலர் இறையன்பு வாக்குமூலம் தாக்கல் செய்துள்ளார்.'சாலைகளிலோ, நடைபாதைகளிலோ, பொது மக்கள் பயன்பாட்டில் உள்ள இடங்களிலோ, இனி சிலைகள் வைக்க, மாநிலங்கள் அனுமதி அளிக்கக் கூடாது' என, 2013 ஜன., 18ல் உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அரசு அலுவலகங்கள், பொது மக்களின் பயன்பாட்டில் உள்ள இடங்கள் என்பதை உணர்ந்து, நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக, கல்வித் துறை வளாகத்தில், முன்னாள் அமைச்சர் அன்பழகன் சிலை நிறுவும் முயற்சியை, தமிழக அரசு கைவிட வேண்டும்.மேலும், கடந்த ஆண்டு அக்., 7ல், சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சுப்பிரமணியன் வழங்கிய தீர்ப்பில், 'பொது இடங்கள், சாலைகள் மற்றும் அரசு நிலங்களில், இனி சிலைகள் அமைக்க அனுமதி அளிக்கக் கூடாது' என, உள்துறை செயலருக்கு உத்தரவிட்டதை, அரசு மறந்து விடக்கூடாது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.