கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்க தென் மாவட்டங்களில் உதயநிதி மேற்கொண்ட சுற்றுப்பயணம் சர்ச்சையை ஏற்படுத்தியதால் அமைச்சர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதி தென் மாவட்டங்களில் 'இல்லம்தோறும் இளைஞரணி' உள்ளிட்ட சில நிகழ்ச்சிகளில் பங்கேற்க சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
துாத்துக்குடி விமான நிலையத்தில் உதயநிதிக்கு அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், கீதா ஜீவன், இளைஞரணி துணைச் செயலர் ஜோயல் ஆதரவாளர்கள், கோஷ்டி கோஷ்டியாக வரவேற்பு அளித்ததில் தள்ளுமுள்ளு சம்பவம் அரங்கேறியது.
முண்டியடித்து வரவேற்பு அளித்ததில்ஏற்பட்ட தகராறு காரணமாக விமான நிலையத்தில் 4 அடி உயர கல் சிலை சேதம் அடைந்தது; அலங்கார பூச்செடிகள் கிழித்தெறியப்பட்டன.
சேதமடைந்த பொருட்களுக்கு இழப்பீடு கேட்டு தி.மு.க.,வுக்கு விமான நிலையம் தரப்பில் 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டு உள்ளது.
![]()
|
உதயநிதியின் சுற்றுப்பயணம்,'கலக'த்துடன் துவங்கியதால் அம்மாவட்ட அமைச்சர்கள், 'அப்செட்' அடைந்தனர்.
துாத்துக்குடி நிகழ்ச்சிகள் முடிந்ததும் கன்னியாகுமரி சுவாமி தோப்பு அய்யா வைகுண்டர் தலைமை பதிக்கு தரிசனம் செய்ய உதயநிதி சென்றார். அங்கு அவர் தலைப்பாகை கட்டாமல், நடைமுறைகளை பின்பற்றாமல் வழிபட்டதால் சர்ச்சை கிளம்பியுள்ளது.
உதயநிதியுடன் சென்ற அமைச்சர் மனோ தங்கராஜ், மேயர் மகேஷ் உள்ளிட்டோர் தலைப்பாகை அணிந்திருந்ததால் அவர்கள் சர்ச்சையிலிருந்து தப்பினர். இது குறித்து வைகுண்டர் தலைமை பதி நிர்வாகி பாலஞானதிபதி அறிக்கை:
நான் மன்னிப்பு கேட்கிறேன். நான் அழைக்கவில்லை. அவர்கள் வருவதாக மேயர் தகவல் தெரிவித்தார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன்.
சட்டையில்லாமல் தலைப்பாகையுடன் வர வேண்டும் என்பதை ஏற்றுக் கொண்டனர். ஐந்து நபர்கள் தான் உள்ளே வருவர் என்றனர்.
நெருக்கடி தள்ளுமுள்ளு என வகையற்ற நிலை ஏற்பட்டு விட்டது. அய்யா வழியினரை பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இளைஞரணி உறுப்பினர் சேர்ப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க கன்னியாகுமரி வந்த உதயநிதியை வரவேற்க 500 கொடி கம்பங்கள், பேனர்கள் அமைக்க தி.மு.க.,வினர் திட்டமிட்டனர்.
கொடிக்கம்பங்கள், பேனர்கள் சரிந்து விழுந்தால், பொது மக்களின் உயிருக்குஆபத்து என்பதால், போலீசார் தடை விதித்தனர்.
போலீஸ் அதிகாரிகளுடன் தி.மு.க.,வினர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரம், கட்சி தலைமைக்கு தெரியவந்ததும், கொடி கம்பங்கள், பேனர்கள் வைக்கக் கூடாது என கண்டித்துள்ளது.
இதையடுத்து 3௦௦௦ மோட்டார் சைக்கிள்களில் உதயநிதிக்கு வரவேற்பு அளிக்க இருந்த திட்டத்தை மாற்றி குறைந்த எண்ணிக்கையிலான மோட்டார் சைக்கிள்களில் அணிவகுப்பு நடத்தி, வரவேற்பு அளித்துள்ளனர்.
உதயநிதியின் சுற்றுப்பயணம் எழுச்சியை உருவாக்குவதற்கு பதிலாக, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதால், தென் மாவட்ட அமைச்சர்கள், 'அப்செட்' அடைந்துள்ளதாக, கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
--- நமது நிருபர்- -