சிவகங்கை: ''நாடு மேக் இன் இந்தியா திட்டங்கள் மூலமே பொருளாதார வளர்ச்சி அடைகிறது,'' என, மத்திய சமூக நீதி, அதிகாரமளித்தல் துறை இணை அமைச்சர் ஏ.நாராயணசாமி பேசினார்.
சிவகங்கை இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில் பணி நியமன ஆணை வழங்கும் விழா நேற்று நடைபெற்றது.
இம்மையத்தில் மத்திய அரசு பணியில் சேர, 258 பேருக்கு பணி நியமன ஆணையை மத்திய இணை அமைச்சர் நாராயணசாமி வழங்கினார்.
டி.ஐ.ஜி., ஆச்சல் சர்மா தலைமை வகித்தார். கலெக்டர் மதுசூதன் ரெட்டி, மதுரை ரயில்வே கோட்ட மேலாளர் ஆனந்த் முன்னிலை வகித்தனர்.
![]()
|
அமைச்சர் பேசியதாவது:
நாட்டில், 10 லட்சம் இளைஞர்களுக்கு மத்திய அரசு துறைகளில் வேலை வழங்க பிரதமர் மோடி உத்தரவாதம் அளித்தபடி, முதற்கட்டமாக எல்லை பாதுகாப்பு படை, தேசிய வங்கிகள் உள்ளிட்ட துறைகளில் ஒரே நாளில், 71 ஆயிரம் பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது.
சிவகங்கை இந்தோ - திபெத் எல்லை பாதுகாப்பு படை பயிற்சி மையத்தில், 258 பேர் பணி உத்தரவை பெற்றனர்.
'வீடியோ கான்பரன்சிங்' வாயிலாக ஒருங்கிணைந்த தொழில் பயிற்சி பெற, 'கர்மயோகி' திட்டத்தை பிரதமர் துவக்கினார்.
'முத்ரா வங்கி கடன்' வாயிலாக, இளைஞர்கள் சிறு தொழில் துவங்கியுள்ளனர். தெருவோர வியாபாரிகளுக்கும் கடனுதவி தருகிறோம்.
இளைஞர்கள் சுய தொழில் துவங்கும் நோக்கத்தை ஊக்குவிக்க, 32 முதல், 35 துறைகளில் சுய வேலைவாய்ப்பு பயிற்சி தரப்படுகிறது. 'மேக் இன் இந்தியா' திட்டம் மூலம், நாடு பொருளாதார வளர்ச்சி அடைகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.
பயிற்சி மைய கமாண்டர் சுரேஷ்குமார் யாதவ் நன்றி கூறினார். பின், சிவகங்கை வேலுநாச்சியார் மணி மண்டபத்தை அமைச்சர் பார்வையிட்டார்.
சிவகங்கையில் மத்திய அரசின் சாலையோர வியாபாரிகள் வளர்ச்சி திட்டத்தில் வழங்கிய தள்ளுவண்டி கடைகளை பார்வையிட்ட அவர், 'இவை நகராட்சி மூலம் இலவசமாக தானே வழங்கப்பட்டது. இதற்காக அதிகாரிகளுக்கு பணம் ஏதும் கொடுத்தீர்களா?' என, கடைக்காரர்களிடம் விசாரித்தார்.
திருநெல்வேலி மாவட்டம், கும்பளம்பாடு கிராமத்தைச் சேர்ந்த எஸ்.தமிழ்ச்செல்வ நாச்சியார் கூறியதாவது:எம்.எஸ்சி., தாவரவியல் பட்டதாரியான நான், என்.சி.சி., 11வது பட்டாலியனில் பயிற்சி பெற்றேன். அதில் ஏற்பட்ட ஊக்கத்தால், எல்லை பாதுகாப்பு படை வீரராக சேர எண்ணி விண்ணப்பித்தேன். எழுத்து, நேர்முக தேர்வு, உடற்கூறு பயிற்சியில் வெற்றி பெற்று அப்பணி நியமன உத்தரவை பெற்றேன். தமிழகத்தில் இருந்து, 33 பேர் இதற்கு தேர்வாகியுள்ளோம். என்.சி.சி.,யில் இருந்ததால், 5 மதிப்பெண் கூடுதலாக வழங்கினர். பெங்களூரில் ஒரு ஆண்டு பயிற்சிக்கு பின், நாட்டின் எல்லை பகுதியில் நியமிக்கப்படுவேன். பிரதமர் மோடிக்கு நன்றி.இவ்வாறு அவர் கூறினார்.