புதுடில்லி : புதுடில்லியில் பெற்றோரால் இளம் பெண் ஆணவ கொலை செய்யப்பட்ட வழக்கில் புதிய தகவல் வெளியாகி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் மதுரா நகரில் உள்ள யமுனா விரைவுச் சாலையில் சமீபத்தில் பெரிய சூட்கேஸ் கேட்பாரற்று கிடந்தது. தகவல் அறிந்து வந்த போலீசார், அதை திறந்து பார்த்த போது உள்ளே பாலித்தீன் பையில் சுற்றப்பட்ட, 22 வயது மதிக்கத்தக்க இளம்பெண் உடல் இருந்தது.
இது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் வெளியானது. இது குறித்து போலீசார் கூறியதாவது: சூட்கேசில் கண்டுபிடிக்கப்பட்ட உடல், தெற்கு டில்லியைச் சேர்ந்த நிதேஷ் யாதவ் - பிரஜ்பாலா தம்பதியின் மகள் ஆயுஷி, 22. கல்லுாரி ஒன்றில் மூன்றாம் ஆண்டு படித்து வந்தார். அவரது உடலை அடையாளம் காட்ட வரும்படி நிதேஷை அழைத்தோம். அப்போது அவர் முன்னுக்குப் பின் முரணான தகவலை தெரிவித்தார்.
அவரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தியதில், மகளை ஆணவ கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். வேறு ஜாதியைச் சேர்ந்த ஒருவரை, திருமணம் செய்து கொண்டதாக கூறிய ஆயுஷியை, கடுமையாக தாக்கி, துப்பாக்கியால் சுட்டுக் கொன்றதாக நிதேஷ் தெரிவித்தார்.
ஆயுஷியின் உடலை சூட்கேசுக்குள் அடைத்து, காரில் எடுத்துச் சென்று யமுனா விரைவுச் சாலையில் வீசியதையும் நிதேஷ் ஒப்புக் கொண்டார். இந்த கொலைக்கு, ஆயுஷியின் தாய் பிரஜ்பாலாவும் உதவியுள்ளார். இவ்வாறு போலீசார் தெரிவித்தனர்.

இதற்கிடையே, ஆயுஷியின் உடல் நேற்று மூன்று டாக்டர்கள் அடங்கிய குழுவால் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அந்த அறிக்கையில், 'ஆயுஷியின் உடலில் இரண்டு குண்டுகள் பாய்ந்துள்ளன. ஒரு குண்டு மார்பிலும், மற்றொரு குண்டு தலையிலும் பாய்ந்துள்ளது' என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து புதுடில்லி போலீஸ் வட்டாரங்கள் கூறியதாவது: ஆயுஷி, தன்னுடன் கல்லுாரியில் படித்த சத்ரபால் குர்ஜார் என்பவரை, ஒரு ஆண்டுக்கு முன்பே காதலித்து திருமணம் செய்துள்ளார். சத்ரபால் வேறு ஜாதியைச் சேர்ந்தவர் என்பதால், ஆயுஷியின் பெற்றோர், கடும் அதிருப்தியில் இருந்தனர். இந்த விவகாரத்தில் பெற்றோருக்கும், ஆயுஷிக்கும் அடிக்கடி தகராறு நடந்து வந்தது.
பெற்றோர் எவ்வளவோ வற்புறுத்தியும், ஆயுஷி அதை பொருட்படுத்தவில்லை. இதனால் கொலை செய்யும் முடிவுக்கு வந்துள்ளனர். இவ்வாறு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.