கோவை: மங்களூருவில் குக்கர் குண்டு வைத்த முகமது ஷாரிக்கின் சமூக வலைதள 'டிபி'யில் ஆதியோகி சிலை இருந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது;அவர், ஈஷா யோகா மையம் வந்து சென்றாரா என்றும் போலீசார் விசாரிக்கின்றனர்.

கர்நாடக மாநிலம், மங்களூருவில் கடந்த வாரம் நடந்த குக்கர் குண்டு வெடிப்பு சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், ஆட்டோவில் குக்கருடன் பயணித்த ஷிமோகாவை சேர்ந்த முகமது ஷாரிக் என்பவர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
போலீஸ் விசாரணையில், அவர் அல்கொய்தா ஆதரவு பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர் என்றும், இரு மாதங்களுக்கு முன் தமிழகத்தில் வெவ்வேறு இடங்களுக்கு வந்து சென்றவர் என்றும் தெரியவந்துள்ளது.
செப்., மாதம் கோவை காந்திபுரம் வந்த அவர், மதி மகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதியில் மூன்று நாள் தங்கியுள்ளார்.
மூன்று நாட்களும் அவர் வெளியில் செல்லவில்லை என்றும், கடைசியாக அறையை காலி செய்து சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்ட் சென்று பஸ் ஏறினார் என்றும், அறையில் இருந்த உடற்கல்வி ஆசிரியர் சுரேந்திரன் போலீசில் தெரிவித்துள்ளார். இத்தகவல் உண்மை தானா என்று கண்டறிய, அந்த தங்கும் விடுதியை சுற்றியுள்ள வீடுகள், கடைகள் உள்ளிட்டவற்றில் இருக்கும் 'சிசிடிவி' கேமரா காட்சிகளை போலீசார் ஆராய்ந்து வருகின்றனர்.

இதற்கிடையே மங்களூரு போலீசார் நடத்திய விசாரணையில், முகமது ஷாரிக்கின் சமூக வலைதள 'டிபி'யாக, கோவை ஈஷா யோகா மையத்தில் இருக்கும் ஆதியோகி சிலை இருந்தது தெரியவந்துள்ளது. கடந்த, 18ம் தேதி வரை இந்த படம் அவரது சமூக வலைதள 'டிபி'யாக இருந்ததை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
இந்த தகவல் பரவியதும், ஷாரிக் உண்மையிலேயே ஈஷா யோகா மையம் சென்றாரா, பாதுகாப்பு ஏற்பாடுகள் பற்றி படம் எடுக்கவும், நோட்டமிடவும் வந்தாரா என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்தது. அதன் அடிப்படையில் விசாரணை நடந்து வருகிறது. தன்னை ஹிந்து என்று மற்றவர்களை நம்ப வைக்கும் நோக்கத்துடன், ஆதியோகி படத்தை 'டிபி'யாக வைத்திருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தாதா பெயரில் தங்கிய ஷாரிக்
தனது உண்மையான பெயரில் தங்கினால் மாட்டிக்கொள்வோம் என்று எண்ணிய ஷாரிக், வெவ்வேறு இடங்களில், வெவ்வேறு பெயர்களில் தங்கியது தெரியவந்துள்ளது. ஆதார் கட்டாயம் என்ற இடங்களில் மட்டும் சட்ட விரோதமாக பெற்ற பிரேம் ராஜின் ஆதார் அட்டையை பயன்படுத்தியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.
அவர் கோவையில், 'காவ்லி அருண் குமார்' என்ற பெயரில் தங்கியுள்ளார். அருண் காவ்லி என்பவர் மும்பையில் தாதாவாக இருந்தவர்; சட்ட விரோத செயல்களில் ஈடுபட்ட அவர், இப்போது திருந்தி அரசியல் கட்சி ஒன்றை நடத்தி வருகிறார். அவரது பெயரை முன்பின்னாக மாற்றிக்கூறி, அதன் பெயரில் அறை வாடகைக்கு எடுத்து தங்கியதை போலீசார் கண்டுபிடித்துள்ளனர்.