திருப்பூர்:புதிய ஆஸ்திரேலிய ஒப்பந்தத்தால் இந்தியாவின் ஏற்றுமதி வர்த்தகம், 2025ம் ஆண்டு, 1.20 லட்சம் கோடியாக உயரும் என, 'பியோ' தெரிவித்து உள்ளது.
இந்திய ஏற்றுமதியாளர் கூட்டமைப்பு (பியோ) தலைவர் சக்திவேல் கூறியதாவது:
இந்தியாவின் வர்த்தகத்தை வளப்படுத்தும் நோக்கில் ஐக்கிய அரபுநாடுகள் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தம் உருவாகியுள்ளது.
ஒப்பந்தம் நிறைவேறிய நாளில் இருந்து, 98.3 சதவீத அளவுக்கு வரிசலுகை கிடைக்கும்; அடுத்த, ஐந்து ஆண்டுகளில், 100 சதவீத வரிச்சலுகை உறுதியாகி விடும்.
ஆயத்த ஆடை, பின்னலாடை மற்றும் ஜவுளி ஏற்றுமதி, தோல் பொருட்கள் ஏற்றுமதி, காலணிகள், நகைகள், பர்னிச்சர் வகைகள், மெஷின்கள், மின்சாதன பொருட்கள் ஏற்றுமதி புதிய ஒப்பந்தத்தால் அதிகரிக்கும்.
இந்தியாவுடன், அமெரிக்கா, ஐரோப்பா, இங்கிலாந்து, கனடா, ஜப்பான் போன்ற நாடுகள், மருந்து வர்த்தகத்தில் ஏற்கனவே ஒப்பந்த வர்த்தக உறவை வைத்துள்ளன.
செம்பு, நிக்கல், நிலக்கரி, அலுமினியம், உல்லன், துத்தநாகம் போன்ற இறக்குமதியும், வரியில்லாத வர்த்தக வரம்புக்குள் வந்துவிடும்.
ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தியாவுக்கு வரும் இறக்குமதியும், 90 சதவீதம் அளவுக்கு வரியில்லாத வர்த்தக வரம்பில் இருக்கும்.
ஆஸ்திரேலியா - இந்தியா இடையே கல்வி கற்பதிலும் உறவு நீடிக்கிறது. புதிய ஒப்பந்தத்தால், 18 மாதம் முதல் நான்கு ஆண்டுகள் வரை, கல்வி 'விசா'வில் சென்று பயில முடியும்; ஒவ்வொரு ஆண்டும், ஒரு லட்சம் இந்திய மாணவர்கள் பயன்பெறுவர்.
ஆஸ்திரேலியாவுக்கான இந்திய ஏற்றுமதி, 2021ம் ஆண்டில், 55 ஆயிரத்து 200 கோடி ரூபாயாக இருந்தது.
இது, 2025ம் ஆண்டில், 1.20 லட்சம் கோடியாக இருக்கும். உற்பத்தி பிரிவில் மட்டுமல்ல, சேவை பிரிவிலும் பரிவர்த்தனை உயரும்.
தற்போது, 31 ஆயிரத்து 200 கோடி ரூபாய் மதிப்பிலான சேவை பிரிவு ஏற்றுமதி, 2025ல் 80 ஆயிரம் கோடி ரூபாயாக உயரும்.
இரு நாடுகள் இடையேயான ஒட்டுமொத்த வர்த்தகம், 4 லட்சம் கோடியை எட்ட வாய்ப்புள்ளது.
இவ்வாறு, அவர் கூறினார்.