அன்னுார் : கழிவுநீர் வெளியேற்றத்தை கண்டித்து கிராம மக்கள் நேற்று காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒட்டர்பாளையம் ஊராட்சி, அல்லிக்காரம்பாளையம், மேற்கு விநாயகர் கோவில் வீதியில், கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் குளம் போல் தேங்கி நிற்கிறது. இதனால் அப்பகுதியில் சுகாதார கேடு ஏற்பட்டு, கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவி வருகிறது.
கழிவுநீரை மேற்கே உள்ள பள்ளத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கும்படி அப்பகுதி மக்கள் பல மாதங்களாக ஒன்றிய அலுவலகத்தில் மனு அளித்து போராடினர். நடவடிக்கை எதுவும் எடுக்காததால் நேற்று அன்னுார் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் அமர்ந்து காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பி.டி.ஓ.,க்கள் லதா, சாய்ராஜ் மற்றும் போலீசார், கிராம மக்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினர். 'தற்காலிகமாக கழிவுநீர் வாகனம் மூலம் அங்கு தேங்கி இருக்கும் கழிவுநீர் உடனடியாக உறிஞ்சி அகற்றப்படும். வரும், 25ம் தேதி (நாளை) கவுன்சில் கூட்டத்தில் இதற்கு தீர்மானம் நிறைவேற்றி கழிவுநீரை வெளியேற்ற குழாய் பதிக்கும் பணி துவக்கப்படும்,' என்றனர்.
அப்போது கிராம மக்கள்,'அதிகாரிகள் இதுபோன்று பலமுறை வாக்குறுதி அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,' என்று கூறி அதிகாரிகளை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர்.
சுமார் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பிறகு, 'உரிய நடவடிக்கை எடுக்காவிட்டால் டிச., 5ம் தேதி ஒன்றிய அலுவலகம் முன் மறியல் போராட்டம் நடத்தப்படும்,' என அறிவித்துவிட்டு கிராம மக்கள் கலைந்து சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.