பொள்ளாச்சி : பொள்ளாச்சி ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், உலக மாற்றுத்திறனாளிகள் தின விழாவை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.
வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி, மாற்றுத்திறனாளிகளுக்கான உள்ளடங்கிய கல்வி சார்பில், போடிபாளையம் நடுநிலைப்பள்ளி, பொன்னாயூர் தொடக்கப்பள்ளி, பி. நாகூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ராமநாதபுரம் அரசு மேல்நிலைப்பள்ளியில், 'இணைவோம், மகிழ்வோம்' நிகழ்ச்சியில், காகித பறவைகள் செயல்பாடுகள் நடைபெற்றன.
அதில், மாற்றுத்திறனாளி மாணவர்கள், சக மாணவர்களை ஒருங்கிணைத்து மரம் நடு விழா, பலுான் ஊதுதல், பட்டம் செய்து பறக்கவிடுதல், காகித பறவைகள் செய்தல், கை அச்சினை வண்ணங்கள் பூசி பதித்தல், இலையில் விலங்குகளின் வடிவங்களை அமைத்தல், பிரமிடு செய்தல்; சாகச வளையம் வைத்து விளையாடுதல் உள்ளிட்ட நிகழ்வுகள் நடைபெற்றன.
தொடர்ந்து காகித கலையாக எண்கள், வடிவங்கள், பூக்கள், இயக்கை பூங்கொத்து செய்தல், மாற்றுத்திறனாளி மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோரை கவுரவித்தல் ஆகிய செயல்பாடுகள் நடைபெற்றன.
பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள் பங்கேற்றனர்.
பொள்ளாச்சி தெற்கு ஒன்றியம் ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், காகித பறவை செயல்பாடுகள் நிகழ்வு, பாலகோபாலபுரம் நகராட்சி பள்ளியில் நடந்தது. அதில், மாணவர்கள் பலுான் ஊதுதல் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வமாக ஈடுபட்டனர்.
நாளை, 25ம் தேதி கலை நிகழ்ச்சியாக நடனம், 29ம் தேதி விளையாட்டுப்போட்டிகள், டிச.,2ம் தேதி சிறார் திரைப்படம், 3ம் தேதி சைகை மொழியில் தமிழ்த்தாய் வாழ்த்து உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.