புதுடில்லி:வேளாண் வேதியியல் நிறுவமான, 'தர்மாஜ் கிராப் கார்டு' நிறுவனம், இம்மாதம் 28ம் தேதியன்று புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதை அடுத்து, அதன் பங்கின் விலையை அறிவித்துள்ளது.
தர்மாஜ் கிராப் கார்டு நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டின் வாயிலாக 251 கோடி ரூபாயை திரட்ட திட்டமிட்டுஉள்ளது.
இதையடுத்து, 28ம் தேதியன்று பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், ஒரு பங்கின் விலை 216 - 237 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.
இந்நிறுவனத்தின் புதிய பங்கு வெளியீடு, 28ம் தேதியன்று துவங்கி, 30ம் தேதியுடன் முடிவடைகிறது.
பங்கு வெளியீட்டின் போது, 216 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும்; நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் 14.83 லட்சம் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதி, குஜராத்தில் புதிய ஆலை அமைக்கவும், நடைமுறை மூலதன தேவைகளுக்கும், கடனை அடைக்கவும் பயன்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளது.
இந்நிறுவனம், தன் தயாரிப்புகளை 25க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது.