கோவை : வேளாண் பல்கலையில், 'வேளாண்மையில் மாறிவரும் காலநிலைக்கு ஏற்ற பயிர்காப்பீடு' என்ற தொழில்நுட்ப பயிற்சி நடந்தது. இதில், ஜெர்மன் அரசு சார்பில், புதுமையான காலநிலை காப்பீட்டுத்திட்ட இயக்குனர் ஜோகென் ராம்கி தலைமையில், குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இந்நிகழ்வு குறித்து, பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி கூறியதாவது:
இந்தியா - ஜெர்மன் திட்டத்தின் கீழ் வேளாண் பல்கலையில், 6 கோடி ரூபாய் மதிப்பில் தற்போது வரை பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. செயற்கைகோள், டிரோன் தொழிநுட்பம் பயன்படுத்தி மத்திய அரசுக்கு, 12 நாட்களுக்கு ஒருமுறை வானிலை தகவல்களை பல்கலை தரப்பில் தெரிவித்து வருகிறோம்.
தவிர, வறட்சி, வெள்ளம் உள்ளிட்ட இயற்கை பேரிடர் சமயங்களில், பயிர் சேதங்களை கணக்கிட்டு, அரசுக்கு பல்கலை தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
இதனால், நிவாரணங்களை உடனுக்குடன் விவசாயிகளுக்கு அரசால் வழங்க முடியும். தனிநபர் விவசாய காப்பீடு திட்டம் செயல்படுத்த, முதல்கட்டமாக ஆராய்ச்சி பணிகள் திருவாரூர், பெரம்பலுார் ஆகிய பகுதிகளில் நடந்து வருகின்றன.
இதன் அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிக்கப்படும். இந்தியா-ஜெர்மன் ஒருங்கிணைந்த செயல்பாடுகள், 2023ம் ஆண்டு மார்ச் மாதம் முடிவு பெறவுள்ள நிலையில், மேலும் மூன்று ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதன் வாயிலாக, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிசெய்யும் பல்வேறு தொழில்நுட்பங்கள் பயன்பாட்டுக்கு வரும்.
இவ்வாறு, அவர் கூறினார்.
நிகழ்ச்சியில், நீர் நுட்ப மைய இயக்குனர் பழனிவேலன் மற்றும் பல்வேறு துறைத்தலைவர்கள் பங்கேற்றனர்.