அனுப்பர்பாளையம்: திருப்பூர் மாநகராட்சி, முதல் மண்டலம் 25 வது வார்டு சோளிபாளையம், சோளிபாளையம் மேற்கு தோட்டம், விநாயகப்பா நகர் பகுதியில், கழிவுநீர் செல்ல 'டிஸ்போஸல் பாயின்ட்' இல்லை.
இதனால், கழிவுநீர் ரேஷன் கடையின் பின், குளம் போல் தேங்கி உள்ளது. கழிவுநீர் அடிக்கடி வீடுகளுக்குள் புகுந்து விடுகிறது. இது குறித்து, அப்பகுதியினர் மாநகராட்சியில் பலமுறை மனு கொடுத்தும் நடவடிக்கை இல்லை.
இதனால், ஆவேசம் அடைந்த பொதுமக்கள் நேற்று மாநகராட்சி முதலாம் மண்டல அலுவலகத்தை முற்றுகையிட்டனர். உதவி பொறியாளர் முனியாண்டி, பேச்சுவார்த்தை நடத்தினார்.
தகலறிந்து அப்பகுதிக்கு சென்ற மேயர் தினேஷ்குமாரை முற்றுகையிட்டு, கழிவுநீர் பிரச்னை குறித்து அதிகாரிகளின் மெத்தனப்போக்கு குறித்து முறையிட்டனர்.
உடனடியாக கழிவுநீரை லாரி மூலம் உறிஞ்சி எடுத்து செல்ல மேயர் உத்தரவிட்டார். சில நிமிடங்களில் வந்த லாரி, கழிவுநீரை உறிஞ்சி சென்றது.
'இனி கழிவுநீர் தேங்காது உடனுக்குடன் அப்புறப்படுத்தப்படும். சாக்கடை கால்வாய் கட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,' என மேயர், அப்பகுதி மக்களிடம் உறுதி அளித்தார்.