விசைத்தறி, கறிக்கோழி, விவசாயம் மட்டுமல்ல, போக்குவரத்து நெரிசலுக்கும் பிரபலமாகி வருகிறது பல்லடம். அப்போது, இப்போது என்றில்லை... எப்போதும் வாகனங்களின் அணிவகுப்பால், 'அய்யோ... பல்லடம் வழியாக போவதா?' என வாகன ஓட்டிகள் 'தலை தெறிக்க' ஓடுகின்றனர்.
இந்த டிஜிட்டல் யுகத்திலும், பல்லடத்தில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண வேண்டுமென்பதில், நெடுஞ்சாலைத் துறையினரோ, வருவாய் துறையினரோ துளி கூட அக்கறை காட்டவில்லை என்பது, பல்லடம் வழியே பயணிப்பவர்களுக்கு நன்றாக தெரியும்.
தொழில் வளர்ச்சிக்கேற்ப பல்லடத்தில், சாலை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்த வேண்டிய கட்டாயம் இப்போது ஏற்பட்டுள்ளது. பல்லடத்தில், விசைத்தறி, கறிக்கோழி உற்பத்தி, விவசாயம் உள்ளிட்ட தொழில்கள் பிரதானமாக உள்ளன. கோவை, திருப்பூர், திருச்சி, மதுரை, பொள்ளாச்சி, உடுமலை, அவிநாசி மற்றும் கொச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லும் வழித்தடமாகவும் உள்ளது.
தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ளதால், வெளி மாநில வாகனங்கள், கன்டெய்னர்கள், டிப்பர், மணல் லாரிகள், சரக்கு வேன்கள், மற்றும் ஆம்புலன்ஸ்கள் உள்ளிட்டவற்றுக்கு இவ்வழித்தடம் பிரதானமாக உள்ளதால், தொழில், வர்த்தக ரீதியாக முக்கிய நகரங்களை இணைக்கிறது.
தினமும், பல ஆயிரம் வாகனங்கள் தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்வதால், வாகன போக்குவரத்து பல மடங்கு அதிகரித்துள்ளது. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, ரிங் ரோடு, கருர் -திருச்சி பசுமை வழிச்சாலை,தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கம் உள்ளிட்ட திட்டங்கள் அறிவிக்கப்பட்டு ஆறு ஆண்டுக்கு மேல் ஆகியும், அறிவிப்பு காகிதத்தில் மட்டுமே இருக்கிறது.
வாகன ஓட்டிகள் ஒரு பக்கம் போக்குவரத்து நெரிசலில் சிக்கி திண்டாடி வர, போக்குவரத்தை கட்டுப்படுத்த வழியின்றி போலீசார் தினமும் திக்குமுக்காடுகின்றனர். குறிப்பாக, திருப்பூர் ரோடு சந்திப்பு, நால் ரோடு சிக்னல், என்.ஜி.ஆர்.,ரோடு, மங்கலம் ரோடு, பஸ் ஸ்டாண்டு, மாணிக்காபுரம் ரோடு சந்திப்பு, செட்டிபாளையம் பிரிவு உள்ளிட்ட பகுதிகளில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
குறிப்பாக, திருமணம் உட்பட விசேஷ நாட்களில், எட்டு திக்கிலிருந்தும் வாகனங்கள் அணிவகுத்து வர, போலீசார் செய்வதறியாது திகைக்கின்றனர். போக்குவரத்து நெரிசலில் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சிக்குவது பல்லடத்தில் தினசரி நிகழ்வாகி விட்டது.
ரிங் ரோடு, பைபாஸ் உள்ளிட்டவை அமைந்தாலும், அவை, பல்லடம் நகரில் இருந்து, 6 கி.மீ., தூரத்துக்கு அப்பால் செல்லும் என்பதால், போக்குவரத்து நெரிசல் குறையுமா என்பது கேள்விக்குறியே. எனவே, மேம்பாலம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
சமீபத்தில் பல்லடத்துக்கு வந்த அமைச்சர் சாமிநாதனிடம் இது குறித்து கேட்டதற்கு, ''பசுமை வழிச்சாலை வருவதற்கான சாத்திய கூறுகள் இல்லை. போக்குவரத்து நெரிசலை தீர்க்க மாநில அரசும் முயற்சித்து வருகிறது,'' என்றார்.
பல்லடம் தொகுதி எம்.எல்.ஏ., ஆனந்தன் கூறியதாவது:
பல்லடம் பனப்பாளையம் -- அண்ணா நகர் வரை மேம்பாலம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக அரசிடம் முதன்மையாக வைத்துள்ளேன். தற்போது, மேம்பாலங்கள் நவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்படுகின்றன. இதனால், வியாபாரிகள் யாருக்கும் பாதிப்பு ஏற்படாது. ரிங் ரோடு பணியையும் அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர் என்றார்.
அண்ணாதுரை: பல்லடத்தின் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காண பைபாஸ் வேண்டுமென பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். அரசு அறிவித்த ரிங் ரோடு பணியும் கிடப்பில் உள்ளது. இதனால், தொழில் நிறுவனங்கள் பெரிய நகரங்களை தேடிச் செல்லும் நிலை ஏற்படும். எனவே, பைபாஸ் ரோடு அமைக்கும் திட்டத்தை போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும்.
ஈஸ்வரன்: தொழில் ரீதியாக பல்லடம் வளர்ந்து வரும் நகரம் என்பதால், பல்லடத்துக்கு பைபாஸ் ரோடு மிக அவசியம். அதேபோல், நகர மக்கள் பயன்பெற மேம்பாலமும் தேவை. மக்கள் தொகை, வாகன பெருக்கத்துக்கு ஏற்ப பல்லடத்துக்கு அடிப்படை வசதிகள் இன்னும் கிடைக்கவில்லை.
சுந்தர்ராஜன்: தாராபுரம் ரோடு பிரிவில் இருந்து அண்ணா நகர் வரை மேம்பாலம் கட்டாயம் அமைத்தால் மட்டுமே போக்குவரத்து நெரிசல் தீரும். நகருக்குள் செல்பவர்கள் மட்டுமே பல்லடத்துக்குள் வருவதுடன், வெளியூர் செல்பவர்கள் பாலம் வழியே செல்வர் என்பதால், யாருக்கும் எந்த இடையூறும் இல்லை. இடம் இருந்தும் மேம்பாலம் அமைக்காதது கவலை அளிக்கிறது.
நந்தகுமார்: அண்ணா நகர் முதல் பனப்பாளையம் வரை மேம்பாலம் தேவை. அதேபோல், பைபாஸ் ரோடு உடனடியாக அமைக்கப்பட்டால், மேம்பாலத்துக்கு அவசியம் இருக்காது. ஆனால், எதிர்கால நலனை கருத்தில் கொண்டால், புறவழிச்சாலை என்பது கட்டாயம் அமைக்கப்பட வேண்டும்.
தங்கவேல்: தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கத்தால் எந்த பிரயோஜனமும் இல்லை. பைபாஸ் அமைந்தாலும், பல்லடத்தில் பெரிய அளவு போக்குவரத்து குறையாது. தினமும், பல்லடம் வழியாக குறைந்தபட்சம், 50 ஆம்புலன்ஸூக்கு மேல் செல்கின்றன. மேம்பாலம் இருந்தால் மட்டுமே போக்குவரத்துக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.
ரிங் ரோடு, பைபாஸ் உள்ளிட்டவை அமைந்தாலும், அவை, பல்லடம் நகரில் இருந்து, 6 கி.மீ., தூரத்துக்கு அப்பால் செல்லும் என்பதால், போக்குவரத்து நெரிசல் குறையுமா என்பது
கேள்விக்குறியே. இதனை முன்கூட்டியே கருத்தில் கொண்டு, மேம்பாலம் அமைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.
போக்குவரத்து நெரிசலில் உயிர்காக்கும் ஆம்புலன்ஸ், மற்றும் தீயணைப்பு வாகனங்கள் சிக்குவது பல்லடத்தில் தினசரி நிகழ்வாகி விட்டது.
- நமது நிருபர் -