ரூ.110 கோடியில் மாவட்ட மருத்துவமனை சானடோரியத்தில் அடுத்த மாதம் பணி துவங்குகிறது

Added : நவ 23, 2022 | |
Advertisement
குரோம்பேட்டை:தென்சென்னை புறநகர் பகுதி மக்களின் வசதிக்காக, தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி, அடுத்த மாதம் துவங்கும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.புறநகரில், குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. தென்சென்னையில் உள்ள, ஒரே அரசு மருத்துவமனை
 ரூ.110 கோடியில் மாவட்ட மருத்துவமனை சானடோரியத்தில் அடுத்த மாதம் பணி துவங்குகிறது

குரோம்பேட்டை:தென்சென்னை புறநகர் பகுதி மக்களின் வசதிக்காக, தாம்பரம் சானடோரியத்தில், 110 கோடி ரூபாய் செலவில், மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி, அடுத்த மாதம் துவங்கும் என்று, மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.

புறநகரில், குரோம்பேட்டையில், ஜி.எஸ்.டி., சாலையை ஒட்டி, அரசு தாலுகா மருத்துவமனை இயங்கி வருகிறது. தென்சென்னையில் உள்ள, ஒரே அரசு மருத்துவமனை இதுவாகும்.

இதைவிட்டால், செங்கல்பட்டு அல்லது சென்னைக்கு தான் செல்ல வேண்டும். 30 கி.மீ., சுற்றளவில் இருந்து, தினசரி, 1,500 பேர், பல்வேறு சிகிச்சைகளுக்காக வந்து செல்கின்றனர்.

100க்கும் மேற்பட்டோர், உள் நோயாளியாக தங்கி, சிகிச்சை பெறும் வசதியும் உள்ளது. இம்மருத்துவமனையில், மாதந்தோறும், 250 முதல் 300 பிரசவம் நடக்கிறது.

இதை தவிர, ஆய்வகம், 'ஸ்கேன்', 'எக்ஸ்ரே', ஹோமியோபதி, யோகா, மருந்தகம், 24 மணி நேர விபத்து சிகிச்சை, காது, மூக்கு தொண்டை, கண் போன்ற பிரிவுகளும் உள்ளன.

விபத்தில் படுகாயமடைவோருக்கு சிகிச்சை அளிக்க வசதியாக, 10 கோடி ரூபாய் செலவில், விபத்து சிகிச்சை பிரிவும் கட்டப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து, புதிதாக செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டபோது, குரோம்பேட்டை தாலுகா மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும் என்று, சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்தனர்.

மாவட்ட மருத்துவமனையாக மாற்றினால், சுற்றியுள்ள, பல்லாவரம், தாம்பரம், சோழிங்கநல்லுார், ஆலந்துார், ஸ்ரீபெரும்புதுார் தாலுகாக்களை சேர்ந்த மக்கள் பயனடைவர் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

இது தொடர்பாக, 'தினமலர்' நாளிதழ் தொடர்ந்து செய்தி வெளியிட்டு வந்தது.

இதையடுத்து, குரோம்பேட்டை மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக தரம் உயர்த்தி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குனரகம், 2021, அக்டோபரில் அனுமதி வழங்கியது.

தொடர்ந்து, இம்மருத்துவமனையை நவீனமயமாக்க, 110 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டது. இதற்காக, தாம்பரம் சானடோரியத்தில், சுகாதாரத் துறைக்கு சொந்தமான இடத்தில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது.

ஆனால், குரோம்பேட்டை அரசு மருத்துவமனை இயங்கும் இடத்தில், தற்போதுள்ள பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, அங்கேயே மாவட்ட மருத்துவமனை கட்ட வேண்டும் என்று, ஒரு தரப்பினர் கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில், இடம் தேர்வு தொடர்பாக, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன், நேற்று மாலை, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் கூறியதாவது:

19 தாலுகா மருத்துவமனைகள் மாவட்ட மருத்துவமனைகளாக தரம் உயர்த்தப்பட்டன. அதில், குரோம்பேட்டையும் ஒன்று. இம்மருத்துவமனையை, மாவட்ட மருத்துவமனையாக மேம்படுத்த, 110 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.

2 லட்சத்து, 27 ஆயிரம் சதுர அடியில், புதிய கட்டடம் கட்டப்பட்டுள்ளது. சானடோரியத்தில், ஐந்து ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அங்கு, மாவட்ட மருத்துவமனை கட்டும் பணி, அடுத்த மாதம் துவங்கும்.

மேலும், குரோம்பேட்டையில் தற்போதுள்ள கட்டடம் தாழ்வாக உள்ளதால், மழை காலத்தில் வெள்ளம் தேங்குகிறது. இதை மேம்படுத்தவும், பணிகள் நடந்து வருகின்றன.

ஒருங்கிணைந்த மகப்பேறு மைய கட்டடத்தில், கூடுதல் தளம் கட்டவும், நிதி ஒதுக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு, அவர் கூறினார்.

அமைச்சர் அன்பரசன், எம்.எல்.ஏ.,க்கள் கருணாநிதி, ராஜா மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.

'ஆதாரம் இருந்தால் கொடுங்கள்'


இம்மருத்துவமனையில், சில நாட்களுக்கு முன், 'இங்குபேட்டரில்' வைத்து சிகிச்சை அளிக்கப் பட்ட ஆண் குழந்தை இறந்தது. முறையான சிகிச்சை அளிக்காததே, குழந்தை இறப்புக்கு காரணம் என குற்றச்சாட்டு தெரிவித்த பெற்றோர், மருத்துவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, சாலை மறியலில் ஈடுபட்டனர்.இது தொடர்பாக, அமைச்சர் சுப்பிரமணியத்திடம், செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ''அரசு மருத்துவமனையில் இறப்பு ஏற்பட்டால், அதை குறை கூறுவதற்காகவே ஒரு கூட்டம் உள்ளது. ஆதாரம் இருந்தால் கொடுங்கள், நடவடிக்கை எடுக்கிறோம்'' என்றார்.


கூடுதல் வசதிகள்


தாம்பரம் சானடோரியத்தில் மாவட்ட மருத்துவமனை கட்டப்பட்டால், ஐந்து தாலுகாக்களை சேர்ந்த மக்களுக்கு, பல்வேறு வசதிகள் கிடைக்கும். குறிப்பாக, 500 படுக்கைகள், தனியாக ஓ.பி., பிளாக், எம்.ஆர்.ஐ., 'ஸ்கேன்', பார்க்கிங் பகுதி, கண், காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை அரங்குகள், தீக்காயம் வார்டுகள் உள்ளிட்ட வசதிகளை இங்கேயே பெறலாம்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X