திருப்பூர்: நுால் விலை ஓரளவுக்கு குறைந்து, சற்று நிம்மதி அடைந்த நிலையில், 'பீக் ஹவர்' என்ற புதிய மின் கட்டணம் விதிக்கப்படுவதால், திருப்பூர் பனியன் தொழில்துறையினர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
தமிழக மின்சாரவாரியம், மின் கட்டணத்தை உயர்த்தியதால், தொழில்துறையினர் மிகுந்த பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். திருப்பூர் பின்னலாடை தொழிலை பொறுத்தவரை, உற்பத்தி 50 சதவீதத்துக்கும் குறைவாக நடந்து கொண்டிருப்பதால், மின்கட்டண உயர்வின் முழுமையான பாதிப்பை உணர முடியவில்லை.
இருப்பினும், மின்சாரத்தை நம்பியே இயங்கும், சாய ஆலைகளும், பிரின்டிங் நிறுவனங்களும் நேரடி பாதிப்புக்கு ஆளாகியுள்ளன. சாய ஆலைகளும், பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு, நிலை கட்டணம் மூன்று மடங்கு உயர்ந்துள்ளதால், உற்பத்தி செலவு பல மடங்கு அதிகரித்துள்ளது.
பெரும் சுமை
பொது சுத்திகரிப்பு நிலையங்கள், மொத்த மின்செலவில், 30 சதவீதம் உயர்ந்துள்ளதாக கவலை அடைந்துள்ளன. பிரின்டிங் மற்றும் சாயத்தொழில்களும், 50 சதவீதத்துக்கும் குறைவாக இயங்கி வருகின்றன. இருப்பினும், மின்கட்டணமும், நிலை கட்டணமும், பெரும் சுமையாக, தலையில் இறங்கியுள்ளதாக அலறிக்கொண்டு இருக்கின்றனர்.
தொழில் நிலவரம் சுமாராக இருப்பதால், மின்கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல், தொழில்துறையினர் அமைதி காத்தனர். இருப்பினும், 'பீக் ஹவர்' மின் கட்டணம் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது.
மின்சாரம் அதிகம் பயன்படுத்தும், காலை மற்றும் மாலை, 6:00 முதல், 10:00 மணி, 'பீக் ஹவர்' என்று பிரிக்கப்பட்டுள்ளது. அந்நேரத்தில் பயன்படுத்தும் மின்சாரத்துக்கு, கூடுதல் கட்டணம் விதிக்கப்படுகிறது.
மற்ற தொழில்துறையினர் எதிர்ப்பு தெரிவித்ததால், 25 சதவீதமாக இருந்த, 'பீக்ஹவர்' கட்டணம்,15 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. இருப்பினும், பெரும் தொகையை கட்டணமாக செலுத்தும் பனியன் நிறுவனங்கள், கட்டணத்தில், 15 சதவீதத்தை, 'பீக் ஹவர்' கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.

குறைக்க வேண்டும்
இதுகுறித்து திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி மற்றும் உற்பத்தியாளர் (டீமா) சங்க தலைவர் முத்துரத்தினம் கூறுகையில், ''பின்னலாடை தொழிலில், 50 சதவீதத்திற்கும் குறைவான உற்பத்தி நடந்து வருவதால், மின் கட்டண உயர்வு பாதிப்பு வெளியே தெரியவில்லை.
நிலை கட்டணம், மூன்று மடங்கு உயர்ந்ததை ஜீரணிக்க முடியவில்லை; இந்நிலையில், 'பீக் ஹவர்' கட்டணம் என்ற புதிய கட்டண விதிப்பால், உற்பத்தி செலவு பலமடங்கு உயரும் அபாயம் இருக்கிறது. தொழில்துறையினர் ஒன்றிணைந்து, முதல்வரை சந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம்,'' என்றார்.
பெரும் தொகையை கட்டணமாக செலுத்தும்பனியன் நிறுவனங்கள், கட்டணத்தில், 15 சதவீதத்தை, 'பீக் ஹவர்' கட்டணமாக செலுத்தியே ஆக வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது.
'பீக் ஹவர்' கட்டணம் என்ற புதிய கட்டணவிதிப்பால், உற்பத்தி செலவு பலமடங்கு உயரும் அபாயம் இருக்கிறது. இதற்காக முதல்வரைசந்தித்து முறையிட முடிவு செய்துள்ளோம்