காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் மாநகராட்சி 16வது வார்டில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக ஏற்பட்ட பிரச்னைக்கு இன்னும் தீர்வு ஏற்படவில்லை. அப்பகுதி மக்களுக்கு லாரி வாயிலாக குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
காஞ்சிபுரம் மாநகராட்சி, 15 மற்றும் 16வது வார்டு பகுதியில் குடிநீரில் கழிவு நீர் கலப்பதாக புகார் எழுந்தது.
அந்த பகுதியை சேர்ந்த சிலருக்கு, 15 நாட்களுக்கு முன் வாந்தி, வயிற்றுப்போக்கு ஏற்பட்டதில் ஒருவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து அந்த பகுதியில் குடிநீர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டது. மேலும் அந்த பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டது.
இருந்தும் குடிநீரில் கழிவு நீர் பிரச்னைக்கு தீர்வு ஏற்படவில்லை. அந்த பகுதியில் ஆறு இடங்களில் பள்ளம் தோண்டி கழிவு நீர் கலப்பு ஏற்பட்டுள்ளதா என, சோதனை செய்யப்பட்டது.
இன்னும் அதற்கான முடிவு தெரியாததால் 15, 16 ஆகிய இரு வார்டு பகுதி மக்களுக்கும் மாநகராட்சி லாரி வாயிலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து மாநகராட்சி உதவி பொறியாளர் ஒருவர் கூறியதாவது:
கழிவு நீர் கலப்பதை கண்டுபிடிக்க முக்கிய இடங்களில் பள்ளம் தோண்டி பரிசோதனை செய்யப்பட்டது. அவ்வாறு இருப்பது தெரியவில்லை. அதனால் அப்பகுதி மக்களுக்கு லாரி வாயிலாகத்தான் குடிநீர் வழங்கப்படுகிறது.
நாளை குடிநீர் திறந்து விடப்பட்டு பரிசோதனை செய்யப்படும். அந்த தண்ணீர் மக்கள் குடிக்க பயன்படுத்துவதற்காக அல்ல. பரிசோதனைக்கு மட்டும் அவ்வாறு செய்யப்படுகிறது.
அந்த தண்ணீரில் கழிவு நீர் கலப்பது இல்லை என தெரிய வந்தால் பின் இரண்டு வார்டு பகுதி மக்களுக்கும் முறையாக குடிநீர் வழங்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.