திருநெல்வேலி: திருநெல்வேலி அருகே காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து, 19 வயது மகளின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த தாய், தானும் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார்.
திருநெல்வேலி மாவட்டம் சீவலப்பேரி அருகே பாலாமடையை சேர்ந்தவர் பேச்சி; இவரது மனைவி ஆறுமுகக்கனி, 45; இவர்களது மகன் முப்பிடாதி, 23; மகள் அருணா, 19. பேச்சியும், மகனும் சென்னையில் லாரி டிரைவர்களாக உள்ளனர். மகள் அருணா கோவையில் தனியார் மருத்துவமனையில் நர்சிங் படித்தார்.
அவருக்கு பெற்றோர் திருமண ஏற்பாடுகள் செய்தனர். நேற்று அவரது வீட்டுக்கு பெண் பார்க்க வருவதாக இருந்தனர். இதற்காக அருணா விடுமுறையில் வீட்டுக்கு வந்திருந்தார். நேற்று முன்தினம் இரவில் அருணா, தன் தாயிடம், வேறு ஒருவரை காதலிப்பதாகவும் அவரைத்தான் திருமணம் செய்து கொள்வேன் எனவும் கூறியுள்ளார். இதனால் தாய் - மகள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. ஆத்திரமுற்ற தாய் ஆறுமுகக்கனி, மகள் அருணாவை துப்பட்டாவால் கழுத்தை நெரித்து கொலை செய்தார். பின், விடிய விடிய மகள் உடலுடன் இருந்தார்.
நேற்று காலை 7:00 மணிக்கு வீட்டில் இருந்த ஹேர் டை, கண்ணாடி துண்டுகள், துாக்க மாத்திரைகளை 'மிக்சி'யில் அரைத்து குடித்தார். கத்தியால் இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். அருகில் வசிப்போர் அவரை மீட்டு, அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.விசாரணையில் மகளை கொலை செய்ததை தாய் ஒப்புக்கொண்டார். அருணா உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். ஆறுமுகக்கனி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார்.
மதுரை அருகே அடுத்தடுத்து குடும்பமே தற்கொலை
திருமங்கலம்: மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே தென்பழஞ்சியைச் சேர்ந்தவர் விவசாயி பூமிநாதன் 45. இவரது மனைவி தங்கம்மாள், 38, மகன் சந்தோஷ் குமார், 16, மகள் சங்கரி. ஓராண்டுக்கு முன் உடல்நலம் பாதிப்பால் சந்தோஷ்குமார் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதனால் மனம் உடைந்த தங்கம்மாள் சில நாட்களுக்கு முன் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்.
விரக்தியில் இருந்த பூமிநாதன் நேற்று முன் தினம் இரவு தோட்டத்து வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அடுத்தடுத்து குடும்பமே தற்கொலை செய்து கொண்ட நிலையில் மகள் சங்கிரியின் வாழ்க்கை கேள்விக்குறியாகி உள்ளது. ஆஸ்டின்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
'ஆன்லைனில்' வெடிபொருள் வாங்கிய கோவை நபர் கைது
கோவை : கோவை குரும்பபாளையத்தை சேர்ந்த செந்தில் குமார் என்பவரது ஆன்லைன் கணக்கில் இருந்து, கடந்த மே மாதம், பொட்டாசியம், சல்பர் உள்ளிட்ட வெடிபொருட்கள், 'ஆர்டர்' செய்து வாங்கியது தெரிந்தது. மாநகர போலீசார் செந்தில்குமாரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில், செந்தில்குமார் மொத்த பழ வியாபாரம் செய்வது தெரிந்தது.
அவரிடம் பணிபுரியும் துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காந்திநகரை சேர்ந்த மாரியப்பன், 32, என்பவர் செந்தில்குமாரின் ஆன்லைன் கணக்கை பயன்படுத்தி வெடிபொருட்கள், 'ஆர்டர்' செய்து பெற்றது தெரிந்தது. இதையடுத்து, சரவணம்பட்டி போலீசார் மாரியப்பனை பிடித்து விசாரணை நடத்தினர். இவர், கோவில்பட்டியில் உள்ள தன் பகையாளிகளை கொலை செய்ய திட்டமிட்டு வெடிபொருட்களை வாங்கியது தெரிந்தது.
மாரியப்பன் மீது, ஏற்கனவே கொலை முயற்சி, கஞ்சா உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. அவரிடம் இருந்து 100 கிராம் பொட்டாசியம், 50 கிராம் சல்பர் பறிமுதல் செய்யப்பட்டது. வெடிபொருள் தடுப்புச்சட்டத்தில் அவர் மீது வழக்குப்பதிந்து, போலீசார் சிறையில் அடைத்தனர்.
30 பைக்குகளை திருடிய 3 மாணவர்கள் கைது
பேர்ணாம்பட்டு : வேலுார் மாவட்டம், பேர்ணாம்பட்டு போலீசார், குடியாத்தம் அருகே, வி.கோட்டா சாலையில் நேற்று வாகனத் தணிக்கை நடத்தினர். அப்போது ஒரே பைக்கில் குடியாத்தம் சென்ற மூன்று பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் பேர்ணாம்பட்டைச் சேர்ந்த பிரதீப், 20; பரவக்கல் சீனிவாசன், 21; குடியாத்தம் ஆறுமுகம், 20, என தெரிந்தது.
மேலும், பைக் திருடர்களான அவர்கள், இரண்டு மாதத்தில், 30 பைக்குகளை திருடியதும், ஆந்திரா மாநிலம் சித்துாரில் உள்ள, தனியார் பாலிடெக்னிக் கல்லுாரியில், 'கம்ப்யூட்டர் சயின்ஸ்' இரண்டாமாண்டு படித்து வருவதும் தெரிந்தது. அவர்களை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து, 20 பைக்குகளை பறிமுதல் செய்தனர். மேலும், பத்து பைக்குகளை விற்றது குறித்து விசாரிக்கின்றனர்.
கள்ளக்காதலுக்கு இடையூறு: வெளிநாட்டில் இருந்து திரும்பிய கணவரை கூலிப்படை ஏவி கொல்ல முயன்ற மனைவி
மதுரை: மதுரையில், கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவனை, காதலன் உதவியுடன் கூலிப்படையால் கொலை செய்ய முயன்ற மனைவியை போலீசார் கைது செய்தனர்.
மதுரை திருப்பாலை பி.வி.கே.ஆர்., நகரைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 37. மஸ்கட் நாட்டில் பொறியாளராக இருக்கும் இவர், ஆண்டிற்கு இருமுறை குடும்பத்தை பார்க்க ஊருக்கு வந்து செல்வார். இவரது மனைவி வைஷ்ணவி, 25. கடந்த செப்டம்பரில் மதுரை வந்தபோது செந்தில்குமாருக்கும், அவரது அண்ணன் நவநீதகிருஷ்ணனுக்கும் சொத்து பிரச்னையில் தகராறு ஏற்பட்டது. இது தொடர்பாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்யப்பட்டது.
இந்நிலையில் அக்., 27 காலை குழந்தையை பள்ளியில் விட்டு 'டூ - வீலரில்' செந்தில்குமார் வீடு திரும்பினார். பொன்விழா நகரில் வந்தபோது டூ - வீலரில் வந்த இருவர், அவரை வழிமறித்து சரமாரியாக வெட்டினர். அவரது அலறலை கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடி வர, கொல்ல முயன்ற இருவரும் தப்பிச் சென்றனர். தற்போது தனியார் மருத்துவமனையில் செந்தில்குமார் சிகிச்சை பெற்று வருகிறார். போலீஸ் விசாரணையில் சொத்து பிரச்னை காரணமாக, தன் அண்ணன் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்தார்.
தல்லாகுளம், உதவி கமிஷனர் ஜெகன்நாதன் தலைமையிலான போலீசார் செந்தில்குமார் மனைவி வைஷ்ணவிடம் விசாரித்த போது, முன்னுக்கு பின் முரணாக பேசியதால், அவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. மேலும் அவரிடம் விசாரித்தபோது, அவர், தன் மாமா மகனான சிவகங்கை மேலவாணியன்குடி வெங்கடேசன், 25, என்பவருடன் சேர்ந்து கூலிப்படையை வைத்து கணவரை கொலை செய்ய முயன்றது தெரிந்தது.
இதை தொடர்ந்து, வைஷ்ணவி, வெங்கடேசன், கூலிப்படையாக செயல்பட்ட சிவகங்கை ஓட்டகுளம் சாந்தகுமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.
மேலும் இது குறித்து போலீசார் கூறியதாவது: பூக்கடை நடத்தி வருபவர் வெங்கடேசன். இவரது அத்தை மகள் வைஷ்ணவி. இருவரும் காதலர்கள். பெற்றோர் எதிர்ப்பால் திருமணம் செய்ய முடியவில்லை. இந்நிலையில் செந்தில்குமாருடன் வைஷ்ணவிக்கு திருமணம் நடந்தது. அவர் வெளிநாட்டில் பணிபுரிந்ததால் வெங்கடேசனுடனான தொடர்பை வைஷ்ணவி தொடர்ந்துள்ளார்.
கடந்த செப்டம்பரில் ஊர் திரும்பிய செந்தில்குமார், 'இனி வெளிநாட்டிற்கு செல்ல போவதில்லை' எனக் கூறினார். இதனால் 'ஷாக்' ஆன வைஷ்ணவியும், வெங்கடேசனும் தங்களது கள்ளக்காதலுக்கு இடையூறாக இருப்பார் எனக்கருதி, கூலிப்படையால் கொலை செய்ய திட்டமிட்டு சம்பவத்தை அரங்கேற்றி உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.
தேசிய நிகழ்வுகள்:
ரயில் எதிரே வந்ததால் பயந்து பாலத்திலிருந்து குதித்த சிறுமி பலி

ஜம்மு : ஜம்முவில் உள்ள பஜல்தாவில், ஒரு சிறுவன் மற்றும் இரண்டு சிறுமியர் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பள்ளி சென்று வீடு திரும்பினர். இவர்கள் ரயில்வே பாலத்தில் வந்தபோது, எதிரே ரயில் வருவதை பார்த்து பயத்தில், பாலத் தில் இருந்து குதித்தனர். இதில், பாத்திமா என்ற 11 வயது சிறுமி சம்பவ இடத்திலேயே பலியானார். இவரின் 12 வயது சகோதரன் மற்றும் 6 வயது தங்கை படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என போலீசார் தெரிவித்தனர்.
தொழிலாளியை கடத்தி பலாத்காரம் செய்த பெண்கள்!
ஜலந்தர் : நான்கு பெண்கள் காரில் கடத்தி சென்று தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக, பஞ்சாபை சேர்ந்த தொழிலாளி புகார் தெரிவித்துள்ளார்.
பஞ்சாபின் ஜலந்தர் மாவட்டத்தில் உள்ள தோல் தொழிற்சாலையில் பணியாற்றும் தொழிலாளி, செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: தொழிற்சாலையில் பணி முடித்து கடந்த 21ம் தேதி வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தேன். கபூர்தலா சாலை அருகே வெள்ளை நிற கார் என் அருகே வந்து நின்றது. அதில் நான்கு இளம் பெண்கள் இருந்தனர். அனைவருக்கும் 20 வயதுக்குள் இருக்கும். காரை ஓட்டி வந்த பெண் ஒரு விலாசம் குறித்து கேட்டார். அவர் கொடுத்த சீட்டை பார்த்துக் கொண்டிருந்தபோது, என் முகத்தில், 'ஸ்பிரே' அடித்தனர். கண்கள் எரிச்சலில் பார்வை தெரியவில்லை. லேசான மயக்கம் ஏற்பட்டது.
மயக்கம் தெளிந்ததும் நான் அவர்களின் காரில் இருந்தேன். கண்களும், கைகளும் கட்டப்பட்டு இருந்தன. ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தினர். அவர்கள் மது அருந்தினர். வற்புறுத்தி என் வாயில் மதுவை ஊற்றினர். மீண்டும் லேசான மயக்கத்தில் இருந்தேன். நான்கு பெண்களும் வலுக்கட்டாயமாக என்னை பாலியல் பலாத்காரம் செய்து, அங்கேயே விட்டுவிட்டு காலை 3:00 மணிக்கு புறப்பட்டு சென்றனர். எனக்கு திருமணம் ஆகி குழந்தைகள் உள்ளனர். அதனால் இது குறித்து போலீசில் புகார் அளிக்க வேண்டாம் என என் மனைவி தடுத்துவிட்டார். இவ்வாறு அவர் கூறினார். இந்த விவகாரம் குறித்து போலீசார் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்து விசாரணையை துவக்கி உள்ளனர்.
பெற்றோர் உள்ளிட்ட நால்வரை கொலை செய்த இளைஞர் கைது
புதுடில்லி: புதுடில்லியின் பாலம் பகுதியைச் சேர்ந்த கேசவ், 25, போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர். இவரது வீட்டிலிருந்து நேற்று முன்தினம் இரவு 10:00 மணிஅளவில் அலறல் சத்தம் கேட்டுள்ளது. இதையடுத்து பக்கத்து வீட்டினர் போலீசாருக்கு தகவல் தந்தனர். விரைந்து வந்த போலீசார் கேசவ் வீட்டை திறந்து பார்த்த போது, அங்கு நான்கு பேர் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்துள்ளனர்.

இது குறித்து போலீசார் கூறியதாவது: கடந்த தீபாவளி முதல் கேசவ் வேலையின்றி இருந்துள்ளார். இதனால் போதைப் பழக்கத்திற்கு, அடிமையாகி உள்ளார். இதையடுத்து, அவரது பெற்றோர் அவரை மறு வாழ்வு மையத்தில் சேர்த்துள்ளனர். சிகிச்சை முடிந்து சமீபத்தில் வீடு திரும்பியுள்ளார். சம்பவத்தன்று இரவு போதை பொருளுக்காக பெற்றோரிடம் பணம் கேட்டுள்ளார்.
அவரது பெற்றோர் பணம் தர மறுத்ததையடுத்து, கத்தியால் பெற்றோரையும், சகோதரி மற்றும் பாட்டியையும் கழுத்து உள்ளிட்ட இடங்களில் பலமுறை குத்தி கொன்றுள்ளார். இதைத்தொடர்ந்து கேசவ் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வாறு போலீசார் கூறினர்.
உலக நிகழ்வுகள்:
வணிக வளாகத்தில் துப்பாக்கிச் சூடு; அமெரிக்காவில் 6 பேர் பலி
வாஷிங்டன்: அமெரிக்காவின் விர்ஜினியா மாகாணத்தின் செசாபீக் நகரில் உள்ள, 'வால்மார்ட்' என்ற பிரபல வணிக வளாகத்தின் ஊழியர்கள் ஓய்வெடுக்கும் அறைக்குள் நுழைந்த அந்த நிறுவனத்தின் மேலாளர் சரமாரியாக சுட்டதாகவும், இதில் ஆறு பேர் உயிரிழந்ததாகவும் போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலாளர் தன்னைத் தானே சுட்டு தற்கொலை செய்ததாகவும் கூறப்படுகிறது. ஆனால், அந்த மேலாளரின் பெயர் வெளியிடப்பட வில்லை. இந்த தாக்குதலுக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவத்துக்கு பல்வேறு தரப்பினரும் அதிர்ச்சியும், கண்டனமும் தெரிவித்துள்ளனர்.