கோவை : அக்., மாதத்துக்கான ஓய்வூதியம் இன்னும் வழங்காததால், சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர்கள் பொருளாதார நெருக்கடியில் தவிக்கின்றனர். அவர்கள், கலெக்டரை நேற்று சந்தித்து முறையிட்டனர்.
கோவை மாவட்டத்தில் சத்துணவு மையங்கள் மற்றும் அங்கன்வாடிகளில் பணியாற்றி, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஓய்வு பெற்றிருக்கின்றனர்.
அவர்களுக்கு மாதந்திர ஓய்வூதியமாக, 2,000 ரூபாய் வழங்கப்பட்டு வந்தது. கடந்த அக்., மாதத்துக்கான ஓய்வூதியத்தொகை, நேற்று வரை வழங்கப்படவில்லை.
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள அவர்கள், மாவட்ட கருவூலகம் மற்றும் சத்துணவு பிரிவில் விசாரித்தபோது, ஓய்வூதியத்துக்கான நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
மனம் நொந்த அவர்கள், நேற்றிரவு கலெக்டரை சந்தித்து, கடந்த மாத ஓய்வூதியம் வழங்க துரித நடவடிக்கை எடுக்க வலியுறுத்தினார்.
தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூயர் சங்க கோவை மாவட்ட செயலாளர் வெங்கடசுப்ரமணியன் கூறியதாவது:
நிதி ஒதுக்கீடு இல்லை என கூறி, அக்., மாத ஓய்வூதியத்தை இன்னும் வழங்காமல் இருக்கின்றனர். 2013ல் இருந்து, சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்பட்ட வருங்கால வைப்பு நிதியும் ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படவில்லை. அத்தொகையையும் கேட்டு வருகிறோம்.
குறைந்த பட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்கக்கோரி, ஜன., 3ல் சென்னையில் உள்ள சமூக நலத்துறை இயக்குனர் அலுவலகம் முன், மாநில அளவில் உண்ணாவிரத போராட்டம் நடத்த இருக்கிறோம்.
இவ்வாறு, அவர் கூறினார்.