இந்தியாவில் அதிக கோடீஸ்வரர்களைக் கொண்ட இரண்டாம் நிலை நகரங்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள 10 நகரங்களில், தமிழகத்தில் உள்ள ஒரே நகரம் கோவை.
அமெரிக்க ஆலோசனை நிறுவனத்தின் ஆய்வின்படி, இந்தியாவில் வாழத்தகுதியான மிகச்சிறந்த நகரங்களின் பட்டியலில், முதல் ஐந்து இடங்களில் கோவைக்குக் கிடைத்துள்ள இடம், மூன்றாவது.
துவங்கி 14 ஆண்டுகளுக்குப் பின், கடந்த ஓராண்டில்தான் கோவையின் டைடல் பார்க் நிரம்பி வழிகிறது. கடந்த ஓராண்டில் மட்டும், கோவையில் புதிதாக 40 தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள் கால் பதித்துள்ளன. இன்னும் ஐந்தாண்டுகளில், கோவையில் 75 நிறுவனங்கள் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை சென்ட்ரலுக்கு அடுத்ததாக, தெற்கு ரயில்வேயில் அதிக வருவாய் தரக்கூடிய ரயில்வே ஸ்டேஷனாக கோவை சந்திப்பு பெருமை பெற்றுள்ளது. மத்திய அரசின் மறு சீரமைப்புத் திட்டத்தில், புதுப்பொலிவு பெறப்போகிறது. மிக விரைவில் விரிவாக்கத்துடன் கூடிய புதிய கட்டமைப்புகளுடன் மிளிரப் போகிறது கோவை சர்வதேச விமான நிலையம்.
தென்னிந்தியாவின் மிக நீளமான பாலம், கோவையில் கட்டப்படுகிறது. திரும்பிய திசையெல்லாம் பாலங்கள் கட்டப்படுகின்றன. ஓரிரு ஆண்டுகளில், மேற்கு புறவழிச்சாலை உருவாகி விடும்.
இப்படி கட்டமைப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் தேசத்தையே திரும்பிப் பார்க்க வைக்கும் அளவுக்கு, கோவை நகரம் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதனால் நகரின் மதிப்பு மட்டுமின்றி, இங்குள்ள நிலங்களின் சொத்து மதிப்பும், கோடிகளாய் உயர்ந்து கொண்டிருக்கிறது. அதுவே கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை அதிகரிக்கவும் காரணமாகியுள்ளது.
அசாத்தியமான இந்த வளர்ச்சிக்குக் காரணம், இங்குள்ள தொழில் முனைவோரும், ஓய்வறியா உழைப்பாளிகளான தொழிலாளர்களும்தான். ஒரு காலத்தில் 'டெக்ஸ் சிட்டி' என்று ஜவுளித்தொழிலுக்கான அடையாளத்தை மட்டுமே பெற்றிருந்த கோவை, இன்றைக்கு இன்ஜினியரிங், பவுண்டரி, ஐ.டி., உயர் கல்வி, உயர் தர மருத்துவம், வேளாண் தொழில்நுட்பம் என பல்வேறு துறைகளிலும் வளர்ந்து, பன்முகத்தன்மையுள்ள நகரமாக ஒளிர்ந்து வருகிறது.
இந்தப் பெருமையை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச் செல்வது, கோவைவாசிகள் ஒவ்வொருவரின் கரங்களிலும் உள்ளது.
உழைப்புக்குப் பெயர் பெற்ற இந்த நகரில், போதை கலாசாரம், வன்முறை, மதவாதம், தீவிரவாதம் போன்றவை தலை துாக்க விடாமல், ஒன்று பட்டு நின்று, உழைப்பாலும் ஒற்றுமையாலும் இன்னும் பெரிய உயரத்துக்கு, நம் நகரை எடுத்துச் செல்ல வேண்டும்.
அப்போதுதான் எல்லோரும் என்றென்றும் இறுமாப்புடன் சொல்லலாம்... என்ர ஊரு கோயமுத்துாருங்கோ!