கோவை : கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை மாவட்ட ஊரக வளர்ச்சி துறையினர், இரு நாட்கள் தற்செயல் விடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அதில், மாவட்ட அளவில், 256 ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.
ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும், காலியாக உள்ள ஊராட்சி ஒன்றிய பணியிடங்களை நிரப்ப வேண்டும், முழு சுகாதார திட்ட மாவட்ட, வட்டார ஒருங்கிணைப்பாளர்களுக்கு மேம்படுத்திய ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, இந்த போராட்டம் நடைபெறுகிறது.
கோவை மாவட்ட ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கமும் இதில் பங்கேற்றுள்ளது; மாவட்ட அளவில், மகளிர் திட்டம், ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஊராட்சி அலுவலகம், மதுக்கரை, பெரியநாயக்கன்பாளையம், அன்னுார், எஸ்.எஸ்.குளம், தொண்டாமுத்துார், சூலுார், காரமடை, கிணத்துக்கடவு உள்ளிட்ட அனைத்து பகுதிகளில் இருந்தும் ஒட்டுமொத்தமாக, 256 ஊழியர்கள் பங்கேற்றனர். இப்போராட்டம் இன்றும் (24ம் தேதி) நடக்கிறது.