பெங்களூரு-பென்ஷன்தாரரான மூதாட்டியின் வங்கி கணக்கில், கூடுதல் தொகையை செலுத்தி, கணக்கை முடக்கிய வங்கி அதிகாரிகளின் செயலை, கர்நாடக உயர்நீதிமன்றம் கண்டித்தது.
பெங்களூரின் விஜயநகரில் வசிக்கும் நளினி தேவியின் கணவர், அரசு துறையில் 22 ஆண்டுகள் பணியாற்றினார். 2014ல் உயிரிழந்தார். அவரது மனைவியின் வங்கி கணக்கில் பண பலன்கள் செலுத்தப்பட்டது. 2016ல் இவரது வங்கி கணக்கில், கூடுதலாக 50 ஆயிரம் ரூபாய் செலுத்தினர்.
அந்த தொகையை திரும்ப பெறும்படி, நளினிதேவி கோரினார். ஆனால், வங்கி அதிகாரிகள் திரும்ப பெறுவதற்கு பதில், அவரது வங்கி கணக்கை முடக்கினர். தொடர்ந்து, வங்கி கணக்கை இயக்கவில்லை. அவர் வங்கி அலுவலகத்துக்கு அலைந்தும் பயனில்லை.
இது குறித்து கேள்வி எழுப்பி கர்நாடக உயர்நீதிமன்றத்தில், மனு தாக்கல் செய்தார்.
மனு குறித்து விசாரணை நடத்திய நீதிமன்றம், வங்கி அதிகாரிகளின் செயலை கண்டித்தது.
'பென்ஷன்தாரர்களின் பிரச்னைகளை, வங்கி அதிகாரிகள் அலட்சியப்படுத்தக் கூடாது. மூத்த குடிமக்களின் விஷயத்தில், கண் குருடாக இருக்கக்கூடாது. உடனடியாக மனுதாரரின் வங்கி கணக்கு மீதான தடையை, நீக்க வேண்டும் என உத்தரவிட்டது.
'மேலும், 2016லிருந்து மனுதாரருக்கு தொந்தரவு கொடுத்ததால், கூடுதலாக செலுத்திய தொகையை அவரிடம், திரும்ப பெறக்கூடாது.
'இந்த தொகையை, குளறுபடிக்கு காரணமான வங்கி அதிகாரிகளிடம் வசூலிக்க வேண்டும்.
'அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனவும் நீதிமன்றம் நேற்று முன்தினம் உத்தரவிட்டது.