அக்கடா/துக்கடா 1

Updated : நவ 24, 2022 | Added : நவ 24, 2022 | |
Advertisement
* 2 வயது சிறுமியை குதறிய நாய் பீதர்: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், தெரு நாய்களின் தொல்லை அதிகரிக்கிறது. பீதர், பசவகல்யாணாவின் காடவான் கல்லியில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். அவ்வப்போது சிறார்கள், பெரியவர்கள் என பலரை, நாய்கள் கடித்துள்ளன.இங்கு வசிக்கும்அஸ்மா சமீர் ஷேக், 2, நேற்று காலை, சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பாய்ந்த வெறி நாய், கடித்து
 அக்கடா/துக்கடா 1* 2 வயது சிறுமியை குதறிய நாய்

பீதர்: கர்நாடகாவின் பல்வேறு மாவட்டங்களில், தெரு நாய்களின் தொல்லை அதிகரிக்கிறது. பீதர், பசவகல்யாணாவின் காடவான் கல்லியில் தெரு நாய்களின் தொல்லை அதிகம். அவ்வப்போது சிறார்கள், பெரியவர்கள் என பலரை, நாய்கள் கடித்துள்ளன.

இங்கு வசிக்கும்அஸ்மா சமீர் ஷேக், 2, நேற்று காலை, சாலையில் விளையாடி கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பாய்ந்த வெறி நாய், கடித்து குதறியது. இதனால் உடலின் பல இடங்களில், பலத்த காயமடைந்த சிறுமி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அவருக்கு டாக்டர்கள் 32 தையல் போட்டுள்ளனர். சிகிச்சை தொடர்கிறது. தெரு நாய்களின் தொந்தரவை கட்டுப்படுத்தும்படி, பொது மக்கள் மன்றாடுகின்றனர்.

* பக்தையின் உருளு சேவை

கலபுரகி: தெலுங்கானா, சங்காரெட்டியின், ஜஹீராபாத்தின், தனாஸ்ரீகிராமத்தைச் சேர்ந்தவர் சசிகலா பஞ்சாளா, 65. இவரது புகுந்த வீடு, கலபுரகி, சிஞ்சோளியின், சொன்டா கிராமம். இவரது கணவர், மகன் இறந்த பின்,திருமண வாழ்க்கையை துறந்து, சன்னியாச வாழ்க்கை நடத்துகிறார்.

தன் கிராமத்தின் பவானி கோவிலில் வசித்து, பக்தி சேவை செய்கிறார். உணவோ, சிற்றுண்டியோ உட்கொள்வதில்லை. வெறும் இளநீர் மட்டுமே அருந்துகிறார். சிறந்த பக்தையான இவர், 2009, 2010, 2011ல், 180 கி.மீ., தொலைவில் உள்ள மஹாராஷ்டிராவின், துளஜாபுராவுக்கு 'உருளு சேவை' செய்தார். தற்போது கலபுரகி, அப்சல்புராவின், கத்தரகியின் பாக்யவந்தி புண்ணிய தலத்துக்கு, 'உருளு சேவை' செய்து வருகிறார்.

நவம்பர் 11ல் துவங்கிய இவரது சேவை, டிசம்பர் 3 அல்லது 4ல் பாக்யவந்தி கோவிலை அடையும். இவருடன் நுாற்றுக்கணக்கானோர் செல்கின்றனர். வழி நெடுகிலும் இவருக்கு பக்தர்கள் பாதபூஜை, புஷ்பார்ச்சனை செய்கின்றனர். தினமும் காலை 7:00 முதல் 11:00 மணி வரை, மாலை 4:00 முதல் 6:00 மணி வரை உருளுசேவை செய்கிறார். மதியம் மற்றும் இரவில் அந்தந்த ஊர்களின் கோவில்களில் ஓய்வு எடுக்கிறார்.

* ஆசிரியர் பற்றாக்குறை

யாத்கிர்: யாத்கிர், குர்மித்கலில், 17 அரசு உயர்நிலை பள்ளிகள், நடுநிலை பள்ளிகள் உட்பட, 107 பள்ளிகள் உள்ளன. இந்த பள்ளிகளில் 170 ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது என, கல்வித்துறை தெரிவித்துள்ளது. கர்நாடக - தெலுங்கானா எல்லையில் உள்ள, புடபாகா கிராமத்தின் அரசு தொடக்க பள்ளியில், 12 ஆசிரியர்கள் தேவை; ஐந்து பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். இங்குள்ள உயர் நிலைப்பள்ளியில், ஒன்பது ஆசிரியர்கள் வேண்டும்; ஐந்து பேர் பணியாற்றுகின்றனர். அப்சல்புராவின், பல்வேறு கிராமங்களில் உள்ள அரசு தொடக்க, உயர்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர்கள் பற்றாக்குறை உள்ளது.

இதற்கு தீர்வு காண, கவுரவ ஆசிரியர்களை நியமிக்கிறது. ஆனால் உயர்நிலை பள்ளிகளுக்கு, அறிவியல், கணிதம், ஆங்கில பாடங்களுக்கு கவுரவ ஆசிரியர்கள் கிடைக்கவில்லை. இதுவே தேர்ச்சி சதவீதம் குறைய காரணம். ஆசிரியர்கள் பற்றாக்குறையை சரி செய்யும்படி, கல்வி வல்லுனர்கள் ஆலோசனை கூறியுள்ளனர்.

* சாலையை கடப்பது எப்படி?

பல்லாரி: பல்லாரி நகரில் மக்கள் தொகை அதிகரிக்கிறது. வாகனங்களின் எண்ணிக்கையும், நாளுக்கு நாள் ஏறுமுகமாகிறது. பெரும்பாலான சாலைகளில், 'ஜீப்ரா கிராசிங்' இல்லை. குறிப்பாக மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாலுகா அலுவலகம், எல்.ஐ.சி., அலுவலகம், எஸ்.பி.ஐ., வங்கி, ரயில் நிலையங்கள் உள்ள சாலைகளில், 'ஜீப்ரா கிராசிங்' இல்லை.

வேகமாக வரும் வாகனங்களுக்கு இடையே, பாதசாரிகள் சாலையை கடக்கும் சூழ்நிலை உள்ளது. மாவட்ட எஸ்.பி., அலுவலகம், துர்கம்மா கோவில் அருகில் நடைபாதை இல்லை. காலை, மாலையில் வாகனங்கள் அதிகமாக செல்கின்றன. சில இடங்களில் போக்குவரத்து போலீசாரும் தென்படுவதில்லை. இதற்கிடையில் பல சாலைகளில், நடைபாதைகளை வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.

இவர்களை மாநகராட்சி அதிகாரிகளோ, மக்கள் பிரதிநிதிகளோ கண்டு கொள்வதில்லை. பண்டிகை, திருவிழா நாட்களில் இத்தகைய சாலைகளில் நடமாடுவதே கஷ்டம் என, மக்கள் தெரிவித்துள்ளனர்.

* ஆசிரியையாக திருநங்கை தேர்வு

ராய்ச்சூர்: சமுதாயத்தில் முற்போக்கு சிந்தனை அதிகரித்த நிலையிலும், திருநங்கைகளை அவமதிப்பது, உதாசீனப்படுத்துவது, கேலி செய்வதும் தொடர்கிறது. இதை போக்கும் நோக்கில், வேலை வாய்ப்பு மற்றும் கல்வியில், திருநங்கைகளுக்கு, கர்நாடக அரசு 1 சதவீதம் இட ஒதுக்கீடு அளித்துள்ளது.

இதன்படி ராய்ச்சூர், மான்வியின் பூஜா என்ற திருநங்கை, அரசு பள்ளி ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ராய்ச்சூரின் சர்வோதயா கல்லுாரியில், பி.எட்., முடித்த இவர், மே மாதம் நடந்த தொடக்க பள்ளி ஆசிரியர்கள் நியமன தேர்வு எழுதினார். அதில் வெற்றி பெற்று, அறிவியல் ஆசிரியையாக தேர்வு செய்யப்பட்டார்.

* கரடிக்கு மருத்துவ பரிசோதனை

கொப்பால்: கொப்பால் கங்காவதியின் கட்டி, உடுமகல், ஆகோலி, விட்டலாபுரா, பெனகல் கிராமங்களில் கரடிகளின் தொல்லை அதிகரித்துள்ளது. இரவில் வயலுக்கு தண்ணீர் பாய்ச்ச, பாத்தி கட்ட, விளைச்சல்களை காவல் காக்க செல்வோரை கரடி தாக்கி காயப்படுத்தும் சம்பவங்கள் அவ்வப்போது நடக்கின்றன. ஆடு, மாடு, நாய் போன்ற கால்நடைகளையும் தாக்குகின்றன.

மக்களின் வலியுறுத்தலால் கட்டி கிராமம் உட்பட பல இடங்களில் வனத்துறையினர், கூண்டுகள் வைத்திருந்தனர். நேற்று முன் தினம் இரவு உணவு தேடி வந்த 7 வயது கரடி, கட்டி கிராமத்தின் அருகில் வைத்திருந்த கூண்டில் சிக்கியது. நேற்று காலை இதை பார்த்த கிராமத்தினர், வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த வனத்துறையினர், கரடிக்கு மருத்துவ பரிசோதனை நடத்தி, பல்லாரியில் புதிதாக துவங்கப்பட்ட, குடுகோட்டே கரடிகள் சரணாலயத்தில் விட்டனர்.

* மணல் கடத்துவோருக்கு பாடம்

விஜயநகரா: விஜயநகரா, ஹொஸ்பேட்டின், பல இடங்களில் மணல் கொள்ளை நடக்கிறது. சட்டவிரோதமாக பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக தகவல் வெளியானது. இதற்கு கடிவாளம் போட, விஜயநகரா மாவட்ட போலீசார், சுரங்கம், சில ஆய்வியல் துறை அதிகாரிகள் இணைந்து செயல்படுகின்றனர். ஆங்காங்கே சோதனையிட்டு, மணலை பறிமுதல் செய்கின்றனர். இரு நாட்களுக்கு முன்பும், ஹொஸ்பேட் புறநகரின், எச்.எல்.சி., கால்வாய் அருகில் சட்டவிரோதமாக பதுக்கப்பட்ட, 40 ஆயிரம் கிலோ மணலையும், டிராக்டரையும் பறிமுதல் செய்தனர். மணலை பதுக்கி வைத்தவர் மீதும், நடவடிக்கை எடுத்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X