இளையான்குடி : இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டத்திற்கு கவுன்சிலர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய அதிகாரிகள் வர வேண்டுமென கவுன்சிலர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இளையான்குடி ஊராட்சி ஒன்றிய கூட்டம் தலைவர் முனியாண்டி தலைமையில் நடந்தது.பி.டி.ஓ.,க்கள் ஊர்க்காவலன்,சாந்தி முன்னிலை வகித்தனர். மேலாளர் இளங்கோவன் வரவேற்றார்.
கூட்டத்தில் நடந்த விவாதங்கள்:
முருகன் தி.மு.க., கவுன்சிலர்: பெரும்பச்சேரி ஊராட்சியில் வீடுகள் கட்டப்பட்டு வேறு ஊராட்சியில் ரசீது போடப்பட்டு மின் இணைப்பு பெற்றுள்ளனர். ஊராட்சிக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
பி.டி.ஓ., சாந்தி: மின்வாரியத்திடம் விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
தனலட்சுமி அ.தி.மு.க, ஒன்றிய துணைத் தலைவர்: மஸ்தூர் பணியாளர்களுக்கு வழங்கப்படும் ஊதியம் அதிகமாக உள்ளது.அவர்கள் எந்தெந்த ஊராட்சியில் பணியாற்றுகின்றனர் என்ற விவரங்களை தெரிவிக்க வேண்டும்.
சண்முகம், ஒன்றிய கவுன்சிலர்: அண்டக்குடி,புதுவலசை கண்மாய்களுக்கு வரத்து கால்வாய்களில் ஆக்கிரமிப்பு உள்ளதால் தண்ணீர் வர முடியாத சூழ்நிலை உள்ளது.
பி.டி.ஓ., ஊர்க்காவலன்: பொதுப்பணித்துறை மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
முருகானந்தம் தி.மு.க., கவுன்சிலர்: ஒன்றிய கவுன்சிலர்களின் கோரிக்கைகளுக்கு நடவடிக்கை எடுக்கக்கூடிய அதிகாரிகள் கூட்டத்திற்கு வர வேண்டும்.இவ்வாறு விவாதம் நடந்தது.