சென்னை:போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட, நடிகர் விஜய்க்கு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
நடிகர் விஜய் அரசியலில் களம் காண காய்களை நகர்த்தி வருகிறார். ஒன்பது மாவட்டங்களில் நடந்த ஊராட்சி தேர்தலில், ரசிகர் மன்ற ஆட்களை போட்டியிடச் செய்தார். அதில், 129 பேர் வெற்றி பெற்றனர்.
அதனால், 2024 லோக்சபா தேர்தலை சந்திக்க வியூகம் வகுத்து வருகிறார். அதற்கு முன்னோட்டமாக, இம்மாதம், 20ல், சென்னை அருகே, பனையூரில், நாமக்கல், சேலம், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களுடன் ஆலோசனை நடத்தினார்.
இவர் வந்த காரை ரசிகர்கள் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதை பார்த்தவர்கள், 'நடிகர் விஜய் காரில் போக்குவரத்து விதிகளை மீறி, கறுப்பு நிற 'ஸ்டிக்கர்' ஒட்டப்பட்டு உள்ளது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சென்னை போக்குவரத்து போலீசார், விஜய் காருக்கு, 500 ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.