தேனி -மதுரை ரோடு தேசிய நெடுஞ்சாலை அரண்மணைப்புதுார் விலக்கு பகுதியில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க
ரூ.70கோடி மதிப்பில் பாலம் அமைக்கப்படுகிறது. மதுரை ரோட்டில் தனியார் மெட்ரிக் பள்ளியில் இருந்து 1200 மீட்டர் நீளம், 19 மீட்டர் அகலத்துடன் பாலம் அமைகிறது.இப் பணிகள் 2023 நவ. முடிக்க உள்ளனர். பாலம் பணிகள் துவங்கி ஐந்து மாதங்கள் ஆனாலும் ரோட்டோரம் உள்ள ஆக்கிரமிப்புகளால் பணிவிரைவு படுத்த முடியாத நிலை உள்ளது.
அரண்மனைபுதுார் விலக்கு பகுதி முதல் திட்ட சாலை சந்திப்பு வரை 47வீடுகளும், 80 கடைகளும் ஆக்கிரமிப்பில் உள்ளதாக கண்டறியபட்டுள்ளது. ஆக்கிரமிப்புகளை அகற்றிட முடிவு செய்யப்பட்டது. அங்கு வசிக்கும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் தேனி தாலுாக அலுவலகம் அருகே மண்டபத்தில் ஆக்கிரமிப்பாளர்களுடன் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் தேசிய நெடுஞ்சாலைத்துறை மதுரை கோட்ட பொறியாளர் முருகன் தலைமை வகித்தார்.
உதவி கோட்ட பொறியாளர் சீத்தாராமன், மண்டல துணை தாசில்தார் மோகன் முனியாண்டி, நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மதுரை உதவி செயற்பொறியாளர் கதிரேசன் பங்கேற்றனர்.
கூட்டத்தில் பேசிய ஆக்கிரமிப்பாளர்கள்,'குடியிருக்க மாற்று ஏற்பாடு அரசு செய்து தரவும், பாலம் பணிக்கு இடையூறு ஏற்படுத்த மாட்டடோம் 'என்றனர்.
கூட்ட முடிவில் ஆக்கிரமிப்பில் வசிப்போருக்கு வேறு எங்கும் சொந்த வீடு, சொத்துக்கள் இருக்க கூடாது. அரசு விதிகளின்படி ஆண்டு வருமானம் உள்ளவர்களுக்கு நகர்புற மேம்பாட்டு வாரிய குடியிருப்புகளில் அரசின் மானியம் போக மீதி ரூ.2.15லட்சம் செலுத்தி வீடு பெற்றுக்கொள்ளலாம்.
அல்லது வீரபாண்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வயல்பட்டி ரோட்டில் 3 சென்ட் காலிமனை வழங்கப்படும். அதற்கான இடம் தேர்வு நடந்து வருகிறது. விரைவில் ஆக்கிரமிப்பை அகற்ற ஒத்துழைப்பு வழங்க அதிகாரிகள் கூறினர்.