சென்னை:போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரியவர்களுக்கு, 35 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அந்த தொகையை, போலீசாருக்கே வழங்கவும் உத்தரவிட்டுள்ளது.
ஆதரவற்றோர் இல்லம் நடத்தி வந்த கலா மற்றும் முத்துகுமார், ஏழு போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க, டி.ஜி.பி.,க்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். மனு, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன், விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் தாக்கல் செய்த பதில் மனுவில், 'சட்டவிரோதமாக ஆதரவற்றோர் இல்லம் நடத்தியதால், மனுதாரர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது. மனுதாரரின் மகன், மாநில மனித உரிமை ஆணையத்தில் தாக்கல் செய்த மனு, தள்ளுபடி செய்யப்பட்டது' என, கூறப்பட்டது.
மனுவை விசாரித்த, நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் பிறப்பித்த உத்தரவு:
குற்றவாளிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்தால், போலீசாருக்கு எதிராக குற்றம் சாட்டும் போக்கு வளர்ந்து வருகிறது.
இதை, ஏற்க முடியாது. ஆதாரமின்றி போலீசாருக்கு எதிராக வழக்கு தொடர்வதும், சமீப காலங்களில் அதிகரித்து வருகிறது. அதேபோல் தான், இந்த வழக்கும்.
ஏற்கனவே, கலா தொடர்ந்த வழக்கு, வாபஸ் பெறப்பட்டது. பின், மூன்று மாதங்களில் அடுத்ததாக இந்த வழக்கை தொடர்ந்துள்ளார்.
சட்டப்படி, நல்ல நோக்கில் கடமை ஆற்றும் போலீஸ் அதிகாரிகளை காப்பாற்ற வேண்டும்.
போலீசாருக்கு எதிராக புகார் வந்தால், முதலில் ஆரம்பகட்ட விசாரணை நடத்தி, குற்றச்சாட்டுகள் உண்மை தானா என்பதை கண்டறிய வேண்டும். ஆதாரம் இருந்தால், நடவடிக்கை எடுக்க வேண்டும்.
எந்தவித நியாயமும் இன்றி, இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. நிவாரணம் கோருவதற்கு சட்டப்பூர்வ உரிமை உள்ளது என்பதை, மனுதாரர்கள் நிரூபிக்கவில்லை. எனவே, வழக்கு செலவு தொகை விதிக்க, இது தகுந்தது.
ஏழு போலீசாருக்கும், தலா 5,000 ரூபாயை, மனுதாரர்கள் வழங்க வேண்டும். அதற்காக, 35 ஆயிரம் ரூபாயை, நான்கு வாரங்களில், மாநகர போலீஸ் கமிஷனரிடம், டிபாசிட் செய்ய வேண்டும். அந்த தொகையை, ஏழு பேருக்கும் பிரித்து அளிக்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.