சென்னை:ஐநுாறு கோடி ரூபாய் மோசடி நடந்தது தொடர்பாக, தனியார் நிதி நிறுவன தலைமை அலுவலகம் உட்பட, 21 இடங்களில், பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் சோதனை நடத்தினர்.
சென்னை கீழ்ப்பாக்கத்தை தலைமையிடமாக வைத்து, 'ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட்' என்ற நிதி நிறுவனம் செயல்பட்டு வந்தது. இந்நிறுவனத்தை சவுந்தரராஜன், 77, அவரது மகன் அலெக்சாண்டர், 42, ஆகியோர் நடத்தி வந்தனர். மேலும், நான்கு நிறுவனங்களை இவர்கள் நடத்தினர்.
'எங்கள் நிறுவனத்தில், 1 லட்சம் ரூபாய் முதலீடு செய்தால், மாதந்தோறும் வட்டியாக, 20 ஆயிரம் ரூபாய் தரப்படும்' என, விளம்பரம் செய்தனர்.
'பொதுமக்கள் செலுத்தும் பணத்தை, சிங்கப்பூர், மலேஷியா உள்ளிட்ட நாடுகளில், எண்ணெய் நிறுவனங்களில் முதலீடு செய்கிறோம். அதில் இருந்து கிடைக்கும் லாபத்தைத்தான் வட்டியாக தருகிறோம்' என்று கூறி நம்ப வைத்தனர். பணம் வசூல் செய்வதற்காக, பல்வேறு இடங்களில் முகவர்களை நியமித்தனர்.
இவர்களை நம்பி, 4,500க்கும் மேற்பட்டோர், 500 கோடி ரூபாய் வரை முதலீடு செய்துள்ளனர். இந்த பணத்துடன், சவுந்தரராஜன், அலெக்சாண்டர் மற்றும் முகவர்கள் தலைமறைவாகினர்.
இதுகுறித்து, மாநில பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சென்னை பெரம்பூர், பெரியார் நகரைச் சேர்ந்த, முகவர் நேருவை, 49, இம்மாதம், 16ல் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஹிஜாவு அசோசியேட் பிரைவேட் லிமிடெட் தலைமை அலுவலகம் மற்றும் இதன் இயக்குனர்களான சவுந்தரராஜன், அலெக்சாண்டர் ஆகியோரின் வீடு உட்பட, 21 இடங்களில் நேற்று சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றி உள்ளனர்.
மோசடி குறித்து, www.hijaueowdsp@gmail.com என்ற இ - மெயிலில் புகார் அளிக்கலாம் என, போலீசார் அறிவித்துள்ளனர்.