புதுச்சேரி-ஓடிக் கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீப் பிடித்து எரிந்ததால் பரபரப்பு நிலவியது.
வில்லியனுார் அடுத்த உறுவையாறை சேர்ந்தவர் இளையராஜா,43; லாஸ்பேட்டை அரசு மகளிர் பாலிடெக்னிக் கல்லுாரியில் பணிபுரிந்து வருகிறார். இவர் நேற்று காலை பி.ஓ., வி.ஏ., 2152 பதிவெண் கொண்ட தனது ஸ்கூட்டரில் கல்லுாரிக்கு புறப்பட்டார்.
காலை 9 மணிக்கு ரெட்டியார்பாளையம் உழவர்கரை நகராட்சி அருகே வந்தபோது, ஸ்கூட்டரில் இருந்து திடீரென புகை வந்தது. அதிர்ச்சியடைந்த இளையராஜா ஸ்கூட்டரை ஓரமாக நிறுத்தினார். அடுத்த சில நிமிடங்களில் ஸ்கூட்டர் தீப்பற்றி எரிந்தது.
தகவலறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
இதுகுறித்து ரெட்டியார்பாளையம் போலீசார் நடத்திய, விசாரணையில், வீட்டின் வெளியே நிறுத்தியிருந்த ஸ்கூட்டரில் எலி புகுந்து குப்பைகளை வைத்துள்ளது. சில ஒயர்களை எலி கடித்துள்ளதால், அதன் மூலம் மொபட் தீப்பிடித்து எரிந்தது தெரிய வந்துள்ளது.
ஓடிக் கொண்டிருந்த ஸ்கூட்டர் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.