புதுச்சேரி-மின்துறை தனியார்மயமாக்கலை கண்டித்து அரசியல் கட்சிகள் டில்லியில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் புதுச்சேரியை சேர்ந்த 6 எம்.எல்.ஏ.,க்கள் பங்கேற்றனர்.
மின்துறை தனியார் மயமாக்கும் மின்சார சட்ட திருத்த மசோதாவை கண்டித்து நேற்று டில்லியில் ஜந்தர் மந்தரியில் அகில இந்திய அளவில் அரசியல் கட்சிகள்,தொழிற்சங்கம் சார்பில் போராட்டம் நடந்தது.
இதில் மத்திய அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பப்பட்டது. இப்போராட்டத்தில் புதுச்சேரி மாநில தி.மு.க., அமைப்பாளரும்,எதிர்க்கட்சி தலைவருமான சிவா தலைமையில் எம்.எல்.ஏ., க்கள் நாஜிம், அனிபால்கென்னடி, சம்பத், செந்தில்குமார், நாகதியாகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு, புதுச்சேரியில் மின் துறை தனியார்மயமாக்கலை எதிர்த்து கோஷம் எழுப்பினர்.
போராட்டத்தில் நாஜிம் எம்.எல்.ஏ., பேசியதாவது:
பா.ஜ., ஆளும் மாநிலங்களில் கூட மின் துறை தனியார் மயமாக்கப்படவில்லை. ஆனால் புதுச்சேரியில் மின் துறை தனியார் மயமாக்கும் முயற்சியை துவக்கியுள்ளனர். இது தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.
எந்த திட்டம் கொண்டு வந்தாலும் அதனை சோதனை எலியாக புதுச்சேரியில் வைத்து மத்திய அரசு சோதிக்கின்றது. அதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இந்நிலையில், காதும், காதும் வைத்த மாதிரி புதுச்சேரியில் மின்துறையை தனியார் மயமாக்கல் மாற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதனைக் கண்டித்து புதுச்சேரியை சேர்ந்த அனைத்து தி.மு.க.,எம்.எல்.ஏ.,க்கள் டில்லி வந்து இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளோம்.
இவ்வாறு அவர் பேசினார்.