பெருங்களத்துார்:காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்தவர் ஜெயராமன், 26; எம்.காம்., பட்டதாரி. தாம்பரத்தை அடுத்த பீர்க்கன்காரணை, கண்ணன் தெருவில், தாய் மற்றும் சகோதரருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார்.
உத்திரமேரூரில் தனியார்கல்லுாரியில் படித்தபோது, அதே கல்லுாரியில் பி.டெக்., படித்த, அதே பகுதியைச் சேர்ந்த யுவராணி, 24, என்பவருடன் பழக்கம் ஏற்பட்டு, காதலாக மாறியது.
இருவரும், 10 ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். இந்த நிலையில், யுவராணிக்கு, அவரது பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து வந்துள்ளனர். இதனால், மனவருத்தம் அடைந்த யுவராணி, நேற்று முன்தினம், பீர்க்கன்காரணையில் உள்ளகாதலன் வீட்டிற்கு வந்தார்.
இருவரும், 'ஆன்லைன்' வாயிலாக மதிய உணவு 'ஆர்டர்'செய்து சாப்பிட்டனர்.மாலை வேலை முடிந்து வீட்டிற்கு ஜெயராமனின் தாய் பவுனம்மாள் வீட்டிற்கு வந்து பார்த்தபோது, இருவரும் ஒரே புடவையில் துாக்கிட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
போலீசார் விரைந்து, இருவரது உடல்களையும் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.
முதற்கட்ட விசாரணையில், இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், யுவராணி வீட்டில் அவர்களின் காதலுக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது. இதனால் மனமுடைந்து தற்கொலை செய்தது தெரிய வந்துள்ளது.