காஞ்சிபுரம்:காஞ்சிபுரம் ஆனந்தாபேட்டையில் இருந்து, திருக்காலிமேடு செல்லும் பிரதான சாலையில், மின் நகர் - மஞ்சள் கால்வாய் இடையே உள்ள சிறுபாலம் அருகில், மாநகராட்சி சார்பில், குப்பை தொட்டி வைக்கப்பட்டுள்ளது.
இந்த தொட்டியில் கொட்டப்படும் குப்பையை மாநகராட்சி துாய்மை பணியாளர்கள் முறையாக அகற்றாததால், தொட்டி நிரம்பி, குப்பை சாலையில் குவியலாக கிடக்கிறது.
திருக்காலிமேடு, மின் நகரில் கால்நடை வளர்ப்போர், தங்களது மாடுகளை வீட்டில் கட்டி வைத்து பராமரிக்காமல், மேய்ச்சலுக்காக வெளியே விட்டு விடுகின்றனர்.
திருக்காலிமேடு பிரதான சாலையில் சுற்றித்திரியும் மாடுகள், அங்கு உள்ள மாநகராட்சி குப்பை தொட்டியை கிளறி அதில் உள்ள உணவுகளை உண்ணுகின்றன.
மேலும், சாலையை மறித்து மாடுகள் சண்டையிட்டு கொண்டு, குறுக்கும், நெடுக்குமாக மிரண்டு ஓடுவதால், இருசக்கர வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி விபத்தில் சிக்கும் சூழல் உள்ளது.
எனவே, மஞ்சள் நீர் கால்வாய் - மின் நகர் சிறுபாலம் அருகில் உள்ள குப்பை தொட்டியை அகற்றுவதோடு, போக்குவரத்துக்கு இடையூறாக சாலையில் சுற்றித் திரியும் மாடுகளை பிடிக்க மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.