மதுரை : தமிழகத்தில் மதுரை டூ திண்டுக்கல் ரோடு வாடிப்பட்டி வகுத்துமலை பகுதியில் முதல் 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் அமையும் நிலையில் தினமலர் நாளிதழ் செய்தி எதிரொலியாக புது நத்தம் ரோடு கடவூரில் 'அனிமல் அண்டர் பாஸ்' பாலமும அமைக்க மாவட்ட வன, தேசிய நெடுஞ்சாலை துறைகள் தமிழக அரசிடம்அனுமதி பெற்றுள்ளது.
'பாரத் மாலா பரியோஜனா' திட்டத்தில் வாடிப்பட்டி முதல் புதுநத்தம் ரோட்டை கடந்து சிட்டம்பட்டி வரை ரூ.555 கோடியில் நெடுஞ்சாலை அமைக்கும் பணி 2018ல் துவங்கி நடக்கிறது. தற்போது 80 சதவீதம் பணி முடிந்தது. இந்த நெடுஞ்சாலை பாலமேடு அருகே வகுத்துமலை பகுதியில் உள்ள 2 மலைகளை கடந்து செல்கிறது.
அங்குள்ள அரிய வகை வன விலங்குகளை காக்க ஒரு மலைக்கும், மற்றொரு மலைக்கும் இடையில் 210 மீட்டர் துாரத்திற்கு 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் அமைக்க கடந்தாண்டு வன, தேசிய நெடுஞ்சாலை துறை தமிழக அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் அரிய வனவிலங்குகள் வாகனங்களில் சிக்கி பலியாகாமல் இயற்கை சூழலில் அமையும் பாலம் வழி வனம், மலைகளுக்கு செல்ல முடியும்.
இதே போல் நெடுஞ்சாலை துறை மதுரை புது நத்தம் ரோடு ஊமச்சிகுளம் வரை பறக்கும் பாலம் கட்டியது. ஊமச்சிகுளம் முதல் நத்தம் வரை 4 வழிச்சாலையாக மாற்றியது. புதிய ரோடு கடக்கும் சத்திரப்பட்டி, கடவூர், வேம்பரளி உள்ளிட்ட கிராம வனப்பகுதிகளில்அரிய வனவிலங்குகள் உள்ளன. வாடிப்பட்டி 'அனிமல் பாஸ் ஓவர்' பாலம் போல் கடவூரிலும் அமைக்க தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. இதன் எதிரொலியாக தற்போது வனத்துறை அரசுக்கு பரிந்துரை அனுப்பியுள்ளது.
மாவட்ட வனஅலுவலர் குருசாமி தபாலா கூறியதாவது:
மதுரை கடவூர் அருகே அழகர்மலை வனங்களில் வனவிலங்குகள் அதிகம் உள்ளன. இங்கும் ரோடு அமைக்கும் நிலையில் வனவிலங்குகள் வாழ்விடம் தேடி அலையும். அதனால் கடவூர், எதிரேயுள்ள அழகர்மலை வனத்திற்கு ரோட்டின் கீழே வனவிலங்குகள் செல்ல 'அனிமல் அண்டர் பாஸ்' பாலம் அமைகிறது. எங்கள் பரிந்துரையை அரசு ஏற்றுள்ளது. 'ஓவர் பாஸ்' பாலப் பணியும் விரைவில் துவங்கும் என்றார்.