மாநகராட்சி 41வது வார்டு பகலவன் பூக்கார தெருவில்ஒருவர்பிரதமர் திட்டத்தின் கீழ் வீடு கட்டியுள்ளார்.பாதாள சாக்கடை, குடிநீர் இணைப்பு பெறும் பணி துவங்கினார்.
அவரை தொடர்பு கொண்ட 42வது வார்டு தி.மு.க. கவுன்சிலர் செல்வியின் கணவர் கார்மேகம்,'என்னை கேட்காமல் மோடி திட்டத்தில் வீடு கட்டக்கூடாது.
நான் தான் கவுன்சிலர்' என மிரட்டும் தொனியில் பேச, பதிலுக்கு அந்த நபர் பேச, 'உன் வாயை உடைப்பேன்' எனகார்மேகம் மிரட்டல் விடுத்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல் தெப்பக்குளம் பகுதியில் வார்டு 41வது வார்டு தி.மு.க., கவுன்சிலர் செந்தாமரை கண்ணனும் மிரட்டல் விடுத்த வீடியோ சர்ச்சையானது.
இந்நிலையில் நகர் செயற்குழுக்கூட்டத்தில் மூத்த நிர்வாகிகள் பேசியதாவது:
வரும் லோக்சபா தேர்தலில் பா.ஜ., அ.தி.மு.க., கட்சிகளுடன் சில பத்திரிகைகளும் நமக்கு எதிராக இருக்கும்.
அலைபேசியில் தி.மு.க., கவுன்சிலர்கள் பார்த்து பேச வேண்டும். உணர்ச்சிவசப்பட்டு பேசினால் அதை செய்தியாக வெளியிட்டு கட்சிக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த தயாராக உள்ளனர். 42வது வார்டு கவுன்சிலர் கணவர் பேசிய ஆடியோ வெளியானது போன்ற நிகழ்வு இனி நடக்கக்கூடாது, என்றனர்.
இக்கூட்டம் அவைத் தலைவர் ஒச்சுபாலு தலைமையில் நடந்தது.
செயலாளர் தளபதி கூட்டம் நோக்கம் குறித்து பேசினார்.
தலைமை செயற்குழு உறுப்பினர் ஜெயராம், முன்னாள் அமைச்சர் பொன்முத்துராமலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ., வேலுச்சாமி, முன்னாள் மேயர் குழந்தைவேலு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.மாவட்ட துணை செயலாளர் மூவேந்திரன் நன்றி கூறினார்.