சென்னை:தமிழ்நாடு மருத்துவ கவுன்சில் தேர்தலை நடத்த ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்கக் கோரிய வழக்கில் மருத்துவ கவுன்சில் மற்றும் தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையில் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை டாக்டர் சையத் தாஹிர் உசைன் தாக்கல் செய்த மனு:
தமிழ்நாடு மருத்துவ கவுன்சிலுக்கு ஜனவரி 19ல் தேர்தல் அறிவிக்கப்பட்டு உள்ளது. கவுன்சிலில் 1.5 லட்சம் உறுப்பினர்கள் உள்ளனர். இவர்களில் 19 ஆயிரத்து 500 பேர் அரசு டாக்டர்கள்.
மருத்துவ கவுன்சில் தேர்தலில் போட்டியிடுபவர்களில் பெரும்பாலோர் அரசு டாக்டர்கள். அரசியல் பின்னணி உடைய அரசு டாக்டர்கள் சிலர் தான் அதிகாரத்துக்கு வருகின்றனர்.
அரசு மருத்துவமனைகளில் பணிபுரியும் டாக்டர்களிடம் செல்வாக்கு மிக்க வேட்பாளர்கள் ஓட்டு சீட்டுக்களை பெற்று ஓட்டு பதிவு செய்கின்றனர். மூன்று தேர்தல்கள் இப்படி தான் நடந்துள்ளது. ஓட்டுச் சீட்டு முறையை தவறாக பயன்படுத்துகின்றனர். நியாயமான தேர்தல் நடப்பதில்லை. அதனால் சரியான நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவது இல்லை; 50 சதவீதம் பேர் ஓட்டு பதிவு செய்வதில்லை.
இந்திய மருத்துவ சங்கம் பெரியது. அந்த சங்கத் தேர்தலில் ஆன்லைன் முறையில் ஓட்டுப் பதிவு செய்யப்படுகிறது. மருத்துவ கவுன்சில் தேர்தலுக்கு தேர்தல் அதிகாரியாக இருப்பவர் தலைவரின் கைப்பாவையாக இருப்பவர்.
எனவே மருத்துவ கவுன்சில் தேர்தல் அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்து தேர்தலை நடத்த வேண்டும். ஆன்லைன் முறையில் ஓட்டு பதிவு செய்ய ஏற்பாடு செய்ய வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
வேட்புமனு நிராகரிப்பு
அரசு டாக்டர்களுக்கான சட்ட ஒருங்கிணைப்பு குழுவின் தலைவரான டாக்டர் எஸ்.பெருமாள் பிள்ளை தாக்கல் செய்த மனுவில் 'மருத்துவ கவுன்சில் தேர்தலில் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தேன். முன்மொழிந்தவர் வழிமொழிந்தவரின் தகுதியை பதிவு செய்யவில்லை எனக்கூறி வேட்புமனுவை நிராகரித்து விட்டனர். எம்.பி.பி.எஸ். படிப்பு மட்டுமே வேட்புமனு செல்லுபடியாக போதுமானது. என் வேட்புமனுவை நிராகரித்தது சட்டவிரோதம். வேட்புமனுவை ஏற்கும்படி தேர்தல் அதிகாரிக்கு உத்தரவிட வேண்டும்' என கூறியுள்ளார்.
இம்மனுக்கள் நீதிபதி ஆர்.சுரேஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தன. மனுக்களுக்கு இரண்டு வாரங்களில் பதில் அளிக்கும்படி தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலுக்கு உத்தரவிட்டு விசாரணையை நீதிபதி தள்ளி வைத்தார்.