சென்னை:மயிலாடுதுறை மாவட்டத்தில், மழையால் அதிகம் பாதிக்கப்பட்ட இரண்டு தாலுகாக்களில் உள்ள, 1.61 லட்சம் குடும்பங்களுக்கு தலா, 1,000 ரூபாய் வழங்க, 16.16 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாக்களில், மழையால் பெரிதும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண உதவியாக, ரேஷன் கார்டு தாரர்கள் ஒவ்வொருவருக்கும் தலா, 1,000 ரூபாய் வழங்கப்படும் என, முதல்வர் ஸ்டாலின், இம்மாதம் 14ம் தேதி அறிவித்தார்.
சீர்காழி தாலுகாவில் 99 ஆயிரத்து 518, தரங்கம்பாடி தாலுகாவில் 62 ஆயிரத்து 129 என மொத்தம், ஒரு லட்சத்து 61 ஆயிரத்து 647 குடும்பங்கள் உள்ளன.அவர்களுக்கு தலா 1,000 ரூபாய் வழங்க, மாநில பேரிடர் நிவாரண நிதியில் இருந்து, 16 கோடியே 16 லட்சத்து 47 ஆயிரம் ரூபாய் ஒதுக்கி, அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
இந்நிதியை பெற்று, ரேஷன் கடைகள் வழியே, ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்குவதை, உறுதி செய்யும்படி, மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் அறிவுறுத்தப்பட்டு உள்ளார்.இது தொடர்பாக, வருவாய் நிர்வாக ஆணையர் பிரபாகர், மயிலாடுதுறை மாவட்டத்துக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.