சென்னை:''கவர்னரிடம் அ.தி.மு.க. இடைக்கால பொதுச்செயலர் பழனிசாமி கொடுத்த புகார்கள் அனைத்துமே ஆதாரம் இல்லாதவை'' என தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறினார்.
சென்னையில் அவர் அளித்த பேட்டி:
தமிழக பா.ஜ.வில் உருவாகியுள்ள உட்கட்சி பூசலை திசை திருப்பும் கருவியாக பழனிசாமி - கவர்னர் ரவி சந்திப்பு அமைந்திருக்கிறது. அ.தி.மு.க. ஆட்சியில் துாத்துக்குடியில் நடந்த துப்பாக்கி சூட்டில் 13 பேர் கொல்லப்பட்டனர். எனவே சட்டம் - ஒழுங்கு பிரச்னை தொடர்பாக பழனிசாமி பேசுவதற்கு உரிமையே இல்லை.
மருந்து தட்டுப்பாடு இருப்பதாக பழனிசாமி குற்றம் சாட்டியிருக்கிறார். ஆனால் 32 மாவட்டங்களிலும் போதிய அளவுக்கு மருந்துகள் கையிருப்பில் உள்ளன.
பழனிசாமி கவர்னரிடம் அளித்த புகார்கள் அனைத்துமே ஆதாரமே இல்லாதவை. பன்னீர்செல்வத்தோடு தன்னை இணைத்து வைத்து அப்போது இருந்த கவர்னர் ஒரு சமரச நடவடிக்கையை உருவாக்கினார்.
அதைபோல தற்போது அ.தி.மு.க.வில் உள்ள இரு அணிகளுக்கும் இடையே நடக்கும் போட்டியில் தனக்கு சாதகமான நிலையை உண்டாக்குவதற்காக கவர்னரிடம் சென்று முறையிட்டாரா என்ற சந்தேகம் எனக்கு எழுகிறது.
இவ்வாறு தங்கம் தென்னரசு கூறினார்.