புனே, 'பஜாஜ் ஆட்டோ' நிறுவனம், 'ஆல் நியு பல்சர் பி150' எனும் புதிய பைக்கை அறிமுகம் செய்துள்ளது.
வடிவமைப்பு மற்றும் செயல்திறன் இரண்டிலுமே, மிக நவீனமாக இந்த பைக் அறிமுகம் ஆகியுள்ளது. மிகவும் குறிப்பிடத்தக்க அம்சம், முந்தைய 150 மாடல் பைக்கை விட, 10 கிலோ எடை மெலிந்து வந்துள்ளது இந்த புதிய பல்சர் பைக் என்பது தான்.
பாதுகாப்பை பொறுத்தவரை, முன்பக்கம் 260 மி.மீ., டிஸ்க் மற்றும் பின்பக்கத்தில் 230 மி.மீ., டிஸ்க் அல்லது 130 மி.மீ., டிரம் இடம்பெற்றுள்ளது. மேலும் இதன் பிரேக்குகள் சிங்கிள் சேனல் ஏ.பி.எஸ்., கொண்டுள்ளது.
இந்த புதிய பல்சரில் 149.68 சி.சி., இன்ஜின் இடம்பெற்றுள்ளது. ஐந்து கியர்கள் கொண்டிருக்கிறது. வடிவமைப்பை பொறுத்தவரை, பெரிய அளவில் மாறுதல்கள் செய்யப்பட்டு, முழு ஸ்போர்ட்ஸ் பைக்காகவே தோற்றமளிக்கிறது.
வண்ணமயமான விண்ட்ஸ்கிரீன், பை பங்ஷனல் எல்.இ.டி., புரொஜெக்டர் முகப்பு விளக்கு மற்றும் எல்.இ.டி., பைலட் விளக்கு போன்ற மாற்றங்களையும் நிச்சயம் குறிப்பிடலாம்.
மொபைல் போனை எளிதாக சார்ஜ் செய்வதற்கு ஏற்ப, வசதியான இடத்தில், யு.எஸ்.பி., மொபைல் சார்ஜிங் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. ஐந்து வண்ணங்களில் அறிமுகம் ஆகியுள்ளது.
மொத்தத்தில், மேம்பட்ட வடிவமைப்பு மற்றும் செயல்திறனுடன் சீறிப் பாய வந்துள்ளது, இந்த ஆல் நியு பல்சர் பி 150 பைக். இதன் டில்லி எக்ஸ் ஷோரூம் விலை 1.17 லட்சம் ரூபாய்.
அறிமுக நிகழ்ச்சியில் பங்கேற்ற பஜாஜ் ஆட்டோ நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் ஷர்மா கூறியதாவது:
இருபது ஆண்டுகளுக்கு முன், 'ஸ்போர்ட்டி'யான மோட்டார் சைக்கிள் அனுபவத்தை பஜாஜ் நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்கியது.
இப்போது மீண்டும் ஆல் நியு பல்சர் பி 150 பைக் அறிமுகத்தின் வாயிலாக, அதே அனுபவத்தை மேலும் ஒரு படி உயர்த்தி உள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.