மதுரை : மதுரை அரசு மருத்துவமனையில் ஒருவயது ஆண் குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்வதற்கு பதிலாக பிறப்புறுப்பில் செய்துள்ளதாக, குழந்தையின் தந்தை அஜித்குமார் போலீசில் புகார் அளித்தார். ஆனால் தவறுதலாக நடக்கவில்லை என டீன் ரத்தினவேல் மறுத்துள்ளார்.
விருதுநகர் சாத்தூர் அமீர்பாளையம் தம்பதி அஜித்குமார் 25, கார்த்திகா 23. கார்த்திகாவிற்கு கடந்தாண்டு அக். 30ல் சாத்தூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. கவின் என்ற அக்குழந்தைக்கு நாக்கு சரியாக வளராமல் இருந்ததால் அதே நாளில் மதுரை அரசு மருத்துவமனைக்கு குழந்தையுடன் கார்த்திகா அனுப்பப்பட்டார். அப்போது இங்கு அனுமதிக்கப்பட்ட நிலையில் 3 நாட்களுக்கு பின் குழந்தையின் நாக்கில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. ஓராண்டு கழித்து நாக்கில் 2வது அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என தெரிவித்தனர். அதற்காக சிலநாட்களுக்கு மீண்டும் மதுரை அரசு மருத்துவமனையில் குழந்தையை சேர்த்த போது தவறுதலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதாக அஜித்குமார் போலீஸ் ஸ்டேஷனில் நேற்று புகார் செய்துள்ளார்.
அஜித்குமார் கூறியதாவது :
எனது குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகளை செய்த பின், நேற்று முன்தினம் அறுவை சிகிச்சைக்கு டாக்டர்கள் அழைத்துச் சென்றனர். தியேட்டரில் இருந்து குழந்தையை தூக்கி வந்த போது, நாக்கிற்கு பதிலாக பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்துள்ளதை பார்த்து அதிர்ச்சியடைந்தோம். டாக்டர்களிடம் கேட்டபோது அவசரமாக குழந்தையை தியேட்டருக்கு அழைத்துச் சென்று மீண்டும் நாக்கில் அறுவைசிகிச்சை செய்தனர். பிறப்புறுப்பில் அறுவை சிகிச்சை செய்த காரணத்தை கேட்டபோது, அவசர சிகிச்சை என்பதால் கேட்காமல் செய்துவிட்டோம் என்றனர். இதையடுத்து போலீசில் புகார் செய்தேன். வறுமையின் காரணமாகவே இங்கு சிகிச்சைக்காக வந்தோம். சுயமாக டாக்டர்கள் அறுவை சிகிச்சை செய்ததை ஏற்றுக்கொள்ள முடியாது. குழந்தைக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு மருத்துவமனை நிர்வாகமே பொறுப்பேற்க வேண்டும் ,என்றார்.
தவறு நடக்கவில்லை
மருத்துவமனை டீன் ரத்தினவேல், அறுவை சிகிச்சை துறைத்தலைவி டாக்டர் மீனாட்சி சுந்தரி கூறியதாவது: அந்த குழந்தை பிறந்து 4 நாட்களில் வாயில் நீர்கட்டியுடன் மூச்சுதிணறல் இருந்ததால் மதுரை அரசு மருத்துவமனை குழந்தைகள் நல வார்டில் அறுவை சிகிச்சை செய்து கட்டி அகற்றப்பட்டது. ஓராண்டுக்கு பின் நாக்கில் மீண்டும் ஒரு அறுவை சிகிச்சைக்காக குழந்தையை அனுமதித்தோம்.
மயக்கமருந்து கொடுத்த பின் குழந்தையின் வயிற்றுப்பகுதியை ஆய்வு செய்த போது சிறுநீரக பிரச்னை இருக்கலாம் என கண்டறியப்பட்டது. பின்னாளில் குழந்தைக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என்பதால் இன்னொரு முறை மயக்கமருந்து கொடுக்காமல் ஒரே நேரத்தில் நாக்கு மற்றும் பிறப்புறுப்பில் இரண்டு சிறிய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
அறுவை சிகிச்சை அரங்கில் இருந்ததால் குழந்தையின் பெற்றோரிடம் தெரிவிக்கவில்லை. இதனால் தந்தை ஆத்திரம் அடைந்து புகார் அளித்துள்ளார். தவறான அறுவை சிகிச்சை செய்யவில்லை.
குழந்தைக்கு நல்லது தான் செய்யப்பட்டுள்ளது. குழந்தை நலமாக உள்ளது என்றனர்.