சென்னை:பத்திரப்பதிவு அடிப்படையில் தானியங்கி முறையில் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கும் வசதி முடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
தமிழகத்தில் வீடு, மனை வாங்குவோர் பத்திரப் பதிவு முடிந்ததும் பட்டாவில் பெயர் மாற்ற தனியாக விண்ணப்பிக்க வேண்டும். இதில் பொதுமக்களுக்கு அலைச்சல் ஏற்படுவதால் வருவாய் மற்றும் நில அளவை துறை 2019ல் சில நடவடிக்கைகளை எடுத்தது.
இதன்படி ஒரு குறிப்பிட்ட சர்வே எண்ணில் அல்லது ஏற்கனவே பட்டா உள்ள உட்பிரிவை சேர்ந்த சொத்து ஒருவர் பெயருக்கு பதிவானால், பத்திரப்பதிவு அடிப்படையில் பட்டா மாற்றும் திட்டம் உருவாக்கப்பட்டது.
புதிதாக உட்பிரிவு மேற்கொள்ள வேண்டிய தேவை இல்லாத சொத்துக்களுக்கு இந்த நடைமுறை எளிதான வழியாக உள்ளது. சார் பதிவாளர் நிலையில் விண்ணப்பம் பதிவானால் அது குறித்த எஸ்.எம்.எஸ்., சொத்து வாங்குவோரின் அலைபேசிக்கு வரும்.
அதில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணப்ப எண் அடிப்படையில்தான், பட்டா மாறுதல் கோப்புகளை கண்டுபிடிக்க முடியும். இந்த நடைமுறையில் விண்ணப்பங்கள் பதிவு பாதிக்கப்பட்டு உள்ளதாக புகார் எழுந்துள்ளது.
இதுகுறித்து, பொது மக்கள் கூறியதாவது:
சொத்து விற்பனை பத்திரப்பதிவின்போது தானியங்கி பட்டா மாறுதலுக்கு சார் பதிவாளர்கள் உரிய அடையாள சான்றுகள் கட்டணம் பெறுகின்றனர். இதன் அடிப்படையில் விண்ணப்பப் பதிவுக்கு அடையாள தகவல் மனுதாரர்களுக்கு வருவது சில மாதங்களாக நிறுத்தப்பட்டு உள்ளது.
இதுகுறித்து சார் பதிவாளர்களிடம் கேட்டால், விண்ணப்பப் பதிவுடன் எங்கள் பணி முடிந்து விட்டது; அதற்கு மேல் அனைத்தும் வருவாய் துறை பொறுப்பு என்கின்றனர்.
கட்டணங்கள் செலுத்தி விண்ணப்பம் பதிவான நிலையில் பட்டா மாறுதல் நடப்பது கேள்விக்குறியாகி உள்ளது. இதில், வருவாய் துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.