கவுஹாத்தி, அசாம் - மேகாலயா எல்லையில் ஆறு பேர் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு பதற்றம் நிலவுகிறது. அசாம் பகுதிக்குள் நுழைந்த மேகாலயா கிராமத்தினர் அங்குள்ள வன அலுவலகம் மற்றும் வாகனங்களை தீ வைத்து எரித்தனர்.
வட கிழக்கு மாநிலமான அசாமில், முதல்வர் ஹிமந்த பிஸ்வ சர்மா தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மேகாலயாவில், முதல்வர் கான்ராட் சங்மா தலைமையில் தேசிய மக்கள் கட்சி - பா.ஜ., கூட்டணி ஆட்சி நடக்கிறது.
இரு மாநிலங்களும், 884 கி.மீ., எல்லையை பகிர்ந்து கொள்கின்றன. இதில் சில இடங்கள் குறித்து இரு மாநிலங்கள் இடையே பிரச்னை உள்ளது. இதை சுமுகமாக தீர்க்க இரு மாநில முதல்வர்கள் இடையே சமீபத்தில் ஒப்பந்தம் கையெழுத்தானது.
இந்நிலையில், இரு மாநில எல்லையான ஜைன்டியா மலைப்பகுதியின் முக்ரோ என்ற இடத்தில், சட்ட விரோதமாக மரக் கட்டை ஏற்றி வந்த லாரியின், 'டயரில்' அசாம் வனத் துறை அதிகாரிகள் சுட்டனர்.
இதையடுத்து லாரியில் வந்தவர்கள் அருகில் இருந்த மேகாலயா கிராம மக்களை திரட்டி வந்து தாக்குதல் நடத்தினர்.
இதில், அசாம் வனத்துறை அதிகாரி உயிரிழந்தார். இதையடுத்து நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில், ஐந்து மேகாலயா கிராம மக்கள் உயிரிழந்தனர்.
இதனால் எல்லையில் பதற்றம் ஏற்பட்டது. இணையதள சேவைகள் துண்டிக்கப்பட்டன. இந்நிலையில், துப்பாக்கி சூடு நடந்த அசாம் பகுதிக்குள் நுழைந்த கிராம மக்கள், அங்கிருந்த வனத்துறை அலுவலகத்தை தீ வைத்து எரித்தனர்.
நாற்காலிகள், ஆவணங்கள், இரு சக்கர வாகனங்களுக்கும் தீ வைக்கப்பட்டது. அரசு வாகனம் ஒன்றும் தீக்கிரையானது.
மேலும், மேகாலயா பகுதிக்குள் வந்த அசாம் வாகனம் ஒன்றும் தீயிட்டு எரிக்கப்பட்டது. அசாமை சேர்ந்த வாகனங்கள் மேகாலயா பகுதிக்குள் செல்லவேண்டாம் என, போலீசார் எச்சரித்துள்ளனர்.