நெட்டப்பாக்கம்-புதுச்சேரியில் இருந்து தமிழகத்திற்கு டீசல் கடத்த முயன்ற டேங்கர் லாரியை போலீசார் கைப்பற்றி கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். மேலும் லாரி டிரைவரை கைது செய்தனர்.
புதுச்சேரி மாநிலம், கல்மண்டபம் தனியார் பெட்ரோல் பங்கில் இருந்து தமிழகப் பகுதிக்கு டீசல் கடத்தப்படுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், நெட்டப்பாக்கம் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர் கதிரேசன் மற்றும் போலீசார் நேற்று விடியற்காலையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, கல்மண்டபத்தில் உள்ள விநாயக முருகன் பெட்ரோல் பங்கில் எதிரில் நின்று கொண்டிருந்த டிஎன்-09-சிஎஸ்- 2918 பதிவு எண் கொண்ட டேங்கர் லாரியின் டிரைவரை பிடித்து விசாரித்தனர்.
அதில், அவர் மயிலாடுதுறையை சேர்ந்த விமல்,25; என்பதும், கல்மண்டபத்தில் இருந்து 5 ஆயிரம் லிட்டர் டீசல் தமிழக பகுதிக்கு கடத்தி செல்ல இருந்தது தெரிய வந்தது.
அதன்பேரில் டீசலுடன் டேங்கர் லாரியை பறிமுதல் செய்து, கலால் துறையினரிடம் ஒப்படைத்தனர். இதன் மதிப்பு ரூ.20 லட்சம் ஆகும்.
மேலும், பிடிபட்ட டிரைவர் விமலிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.