விழுப்புரம்-விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நேற்று பள்ளி அளவிலான கலைத்திருவிழாவை கலெக்டர் மோகன் துவக்கி வைத்தார்.
விழுப்புரம் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பள்ளிகள் அளவிலான கலைத்திருவிழாவில் கலெக்டர் மோகன் துவக்கி வைத்து பே சியதாவது:
தமிழக முதல்வர் லட்சக்கணக்கான மாணவர்கள் பயன்பெறும் வகையில் பள்ளி, வட்டாரம், மாவட்டம் மற்றும் மாநில அளவில் கலைத் திருவிழா போட்டி நடத்த உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி விழுப்புரம் மாவட்டத்தில் பள்ளி அளவில் இன்று முதல் நவ., 28ம் தேதி வரையும், வட்டார அளவில் நவ., 29 முதல் டிச., 5 வரையும், மாவட்ட அளவில் டிச., 6 முதல் டிச., 10 வரையும் என, 6 முதல் 8ம் வகுப்பு வரை; 9 மற்றும் 10ம் வகுப்பு வரை; பிளஸ் 1, பிளஸ் 2 வரை என, மூன்று பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது.
விழுப்புரம் மாவட்ட மாணவர்கள் தான், அதிகளவில் கலைத்திருவிழா போட்டிகளில் பங்குபெற பெயர் பதிவு செய்து இருப்பது மிகவும் மகிழ்ச்சி. இக்கலைத்திருவிழா நமது பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை காத்திடும் பொருட்டு நடத்தப்படுகிறது.
கலைத்திருவிழாவின் மூலம் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தை காப்பதோடு, மாணவர்களின் தனித்திறமைகளை வெளிக்கொணருவதற்கும் ஒரு வாய்ப்பாக அமையும். இசை மற்றும் நாடக வடிவில் ஒரு கருத்தை நாம் சொன்னால் அது அனைவரின் உள்ளத்திலும் ஆழமாக பதியும். மாணவர்கள் படிப்பில் ஆர்வம் செலுத்துவதோடு, இசை, நடனம் போன்ற தனித்திறமைகளையும் வளர்த்துக்கொள்ள வேண்டும்' என்றார்.
தொடர்ந்து கலைத்திருவிழா போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவியர்களுக்கு புத்தகங்களை வழங்கி பாராட்டினார்.
நிகழ்ச்சியில் சி.இ.ஸ்., கிருஷ்ணப்பிரியா, தலைமையாசிரியர் சசிகலா, உதவி திட்ட அலுவலர் தங்கவேல், ஒருங்கிணைப்பாளர் கலைச்செல்வி உட்பட பலர் பங்கேற்றனர்.