மதுரை : \தொடர்ந்து 3வது ஆண்டாக தேசிய பள்ளிகள் விளையாட்டு குழும போட்டிக்கான அறிவிப்பு வெளியாகாததால் உயர்கல்வி, வேலை வாய்ப்பு பறிபோவதாக பள்ளி விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வேதனை தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றின் காரணமாக 2020 - 21, 2021 - 22ல் தேசிய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் மத்திய அரசு விளையாட்டு போட்டிகளை நடத்தவில்லை. இந்தாண்டு நிலைமை சீரடைந்த நிலையில் அனைத்து வகையான விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டு வருகின்றன.
தேசிய பள்ளி விளையாட்டு குழுமம் சார்பில் ஆண்டுதோறும் ஆகஸ்டில் மாநில அளவிலான வீரர், வீராங்கனைகள் தேர்வு தொடங்கி அடுத்தாண்டு ஜனவரி வரை போட்டிகள் நடத்தப்படும். பழைய, புதிய விளையாட்டுகள், தடகள விளையாட்டுகள் நடத்தப்படுவதால் அந்தந்த மாநில அரசுகளுக்கு தகவல் தெரிவிக்கப்படும். இதற்கான கமிட்டி கூட்டம் நடத்தப்பட்டு எந்தெந்த விளையாட்டுகளை எந்தெந்த மாநிலங்கள் நடத்துவதென தீர்மானம் இயற்றப்படும். அதற்கேற்ப போட்டிகள் நடத்தப்படுவதாக அறிவிக்கப்படும்.
இந்தாண்டு ஆகஸ்டில் வர வேண்டிய அறிவிப்பு தற்போது வரை வெளியாகவில்லை. தேசிய போட்டிகளில் முதலிடம் பெற்ற வீரர்களுக்கு தலா ரூ.2 லட்சம், 2ம் பரிசுக்கு தலா ரூ.1.5 லட்சம், 3ம் பரிசுக்கு தலா ரூ.ஒருலட்சம் வீதம் மாநில அரசு ஊக்கத்தொகையாக வழங்கியது.
கொரோனா தொற்றுக்கு முன் ஒன்பதாம் வகுப்பு படித்த மாணவ, மாணவிகளுக்கு இந்தாண்டு வாய்ப்பு கிடைத்தால் தான் தங்களது திறமையை நிரூபிக்க முடியும். தொடர்ந்து 3ஆண்டுகள் பங்கேற்ற, வெற்றி பெற்ற சான்றிதழ் இருந்தால் விளையாட்டு கோட்டா மூலம் உயர்கல்வியில் எளிதாக இடம் கிடைக்கும். மத்திய அரசு தேசிய பள்ளி விளையாட்டு குழும போட்டிகளை நடத்த வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.