சிக்கல் : சிக்கல் அருகே பேய்க்குளம் ஊராட்சிக்கு உட்பட்ட டி.ஆலங்குளத்தில் ஆறு மாதங்களாக அரசு கிராமப்புற நூலகத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி செயல்படும் நிலையில் சேதமடைந்த பள்ளி கட்டடத்தை அகற்ற கிராம மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
சிக்கல் அருகே டி.ஆலங்குளத்தில் 1961ல் கட்டப்பட்ட ஓட்டு கட்டடத்தில் பள்ளி செயல்பட்டு வந்தது. பள்ளிக்கூடத்தின் கூரை ஓடுகள் சேதமடைந்ததால் மழை காலங்களில் நேரடியாக மழை நீர் பள்ளி முழுவதும் தேங்கியதால் மாணவர்களுக்கு ஆசிரியர்களுக்கும் பெரும் இடையூறாக இருந்தது.
பள்ளி கட்டடத்தின் பக்கவாட்டு சுவர்களில் விரிசல் ஏற்பட்டதால் எப்போது வேண்டுமானாலும் இடிந்து விழும் அபாயம் நிலவியது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி அரசு தொடக்கப்பள்ளி அருகே அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தில் கட்டப்பட்ட கிராமப்புற நூலகத்தில் குறுகிய இடத்தில் பள்ளி செயல்படுகிறது.
நூலகத்தில் ஏராளமான புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளதால் வாசகர்கள் நூலகத்திற்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியர் உட்பட ஒரு ஆசிரியரும், 15 மாணவர்களும் உள்ளனர். 1 முதல் 5 வகுப்புகள் வரை ஒரே அறை கட்டடத்தில் செயல்படுகிறது.
டி.ஆலங்குளம் கிராமத்தை சேர்ந்த விவசாயி போஸ் கூறுகையில், 2014ல் ரூ.3 லட்சம் செலவில் பெயரளவில் மராமத்து பணிகள் செய்யப்பட்டது. சேதமடைந்த ஓட்டு பள்ளி கட்டடத்தை இடித்துவிட்டு புதிய கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்சமயம் நூலகத்தில் பள்ளி செயல்படுவதால் இட நெருக்கடியில் மாணவர்களும் ஆசிரியர்களும் உள்ளனர். எனவே கல்வித் துறை அதிகாரிகள் ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றனர்.
கடலாடி வட்டார கல்வி அலுவலர் ஜெயம் கூறுகையில், சேதமடைந்த பள்ளி கட்டட விபரம், நிலை குுறித்து மாவட்ட நிர்வாகத்திற்கு அறிக்கை அளித்துள்ளோம், என்றார்.