விழுப்புரம்-விழுப்புரம் மாவட்ட கலெக்டர் கூட்டரங்கில், மாதாந்திர விவசாயிகள் குறைதீர் கூட்டம் நேற்று நடந்தது.
கலெக்டர் மோகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில், விவசாயிகள் முன்வைத்த கோரிக்கைகள்;
காணை ஒன்றியத்தில் நுாறு நாள் வேலையான குளம் வெட்டும் பணியை ஜே.சி.பி. மூலம் செய்து ஊழல் செய்கின்றனர். மரக்காணம் கந்தாடு கிராமத்தில் கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க டாக்டர்கள் இல்லை.
ஆரம்ப சுகாதார நிலைய டாக்டர்களுடன் மாவட்ட நிர்வாகம் கலந்தாலோசனை செய்து, உயிரிழப்புகளை தடுக்கவும், உயிர்காக்கும் மருந்துகள் கையிருப்பில் வைக்க வேண்டும்.
பொதுப்பணித்துறையில் போதிய நிதி இல்லாததால், ஏரி குடிமராமத்து பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது. உளுந்து, விதை நெல் வெளி வியாபாரிகள் அதிக விலைக்கு வாங்கும்போது, வேளாண்துறை கிலோ ரூ. 83க்கு வாங்குகிறது. கடந்த 4 வருடமாக விலை உயர்த்தாததால் விவசாயிகள் பாதிக்கப்படுகின்றனர். விவசாயிகளுக்கு மானிய விலையில் டீசல் வழங்க வேண்டும்.
ஏனாதிமங்கலம் கிராமத்தில் கடந்த 2019-20ம் ஆண்டு பசுமை தீர்ப்பாய அறிக்கையின்படி மணல் குவாரி அமைத்திருக்கலாம். கடந்த 2 ஆண்டுகளாக அங்கு மணல் கரைந்து சென்று விட்டது. தற்போது குவாரி அமைத்தால் அருகில் உள்ள விவசாய நிலங்கள் பாதிக்கப்படும். அரசு அனுமதிக்கும் இடத்தை தாண்டி மணல் எடுக்கப்படும். எனவே, அங்கு மணல் குவாரி அமைக்க கூடாது.
ஆழங்கால் வாய்க்கால் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கால்நடைகளுக்கு வரும் இளம்பி நோய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
குறுநில மன்னர்கள்
விழுப்புரம் மாவட்டத்தில் பல ஆண்டுகளாக வருவாய்த்துறையில் பணியாற்றும் கிராம நிர்வாக அலுவலர், உதவி கிராம நிர்வாக அலுவலர் மாற்றப்படவில்லை. இதனால் குறுநில மன்னர்கள் போல் செயல்படுகின்றனர். கரும்பு வெட்ட ஆட்கள் கிடைக்காததால், கரும்பு வெட்டும் இயந்திரம் புதிதாக வாங்க வேண்டும். கரும்பு நிலுவை தொகை பெற்று தர வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
கலெக்டர் மோகன் பதில் அளித்து பேசியதாவது;
எல்லீஸ்சத்திரம் அணைகட்டு, நந்தன் கால்வாய் திட்டம் தொடர்பாக கடந்த வாரம் முதல்வரை சந்தித்து தெரிவித்தேன். ஓரிரு வாரத்தில் இப்பணிகள் துவங்குவதற்கான ஆணை வெளியாகும். ஒவ்வொரு கூட்டுறவு சொசைட்டியும், தங்களிடம் உள்ள உரம் விபர பட்டியலை அலுவலக வாசலில் ஒட்ட வேண்டும்.
விவசாய விளைபொருட்களை விற்பனை செய்யும் இ-நாம் முறை குறித்து விவசாயிகள் மற்றும் வியாபாரிகளுக்கு முறையான பயிற்சி அளித்து, டிசம்பர் 2வது வாரத்தில் இ-நாம் முறையாக செயல்படும்.
கால்நடைகளை பாதிக்கும் இளம்பி நோய் குறித்து விழிப்புணர்வு பேனர்கள் வைக்க வேண்டும். வெட்டி அனுப்பிய கரும்பிற்கு 2 வாரத்திற்குள் பணம் பட்டுவாடா செய்யப்படும்.
மணலுக்கு பதிலாக எம்சான்ட் பயன்படுத்தப்படுகிறது. பாறைகள் உடைத்து எம் சான்ட் தயாரிக்கப்படுகிறது. பாறையை உடைக்க கூடாது என வாதிட்டால் எம் சான்ட் கிடைக்காது. கட்டுமானம் ஏதும் செய்ய முடியாது.
எனவே, மணல் தற்போது தேவை. இருந்தாலும் மணல் குவாரியால் விதிமீறல்கள் ஏற்பட கூடாது என்பதிற்காக பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
ஏனாதிமங்கலத்தில் 11 எக்டர் பரப்பளவில் உள்ள 2.84 லட்சம் கன மீட்டர் மணல் மட்டுமே எடுக்கப்படும். அரசு அறிவித்துள்ள அளவை தாண்டி மணல் எடுக்கப்பட மாட்டாது. மணல் குவாரி துவங்குவதிற்கு முன் பொதுமக்கள், நிபுணர்கள் கருத்து கேட்கப்படும். இவ்வாறு கலெக்டர் தெரிவித்தார்.
கூட்டத்தில் வருவாய் அலுவலர் பரமேஸ்வரி, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் ேஷாபனா, வேளாண்துறை இணை இயக்குநர் பெரியசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டத்தில் 48 இயற்கை விவசாயிகள் குழுவாக இணைந்து இயற்கை விவசாயம் செய்து வருவதாகவும், தங்களின் விளை பொருட்களை விற்பனை செய்ய இடம் அளிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். புதிய பஸ் நிலையம் அருகில் உள்ள பூமாலை வணிக வளாகத்தில் 5 கடைகள் வாடகைக்கு வழங்குவதாகவும், இதுதவிர உழவர்சந்தை மற்றும் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஸ்டால் அமைத்து கொள்ள அனுமதி அளிப்பதாக கலெக்டர் உறுதி அளித்தார்.